முதியோர் பென்ஷன் தொகை உயர்த்தும் திட்டம் இல்லை - மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: முதியோர் பென்ஷன் தொகையை உயர்த்தும் திட்டம் இல்லை என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறையின் இணை அமைச்சர் சாத்வீ நிரஞ்சன் ஜோதி தகவல் அளித்துள்ளார். திமுக எம்.பி டி.ரவிகுமார் இன்று மக்களவையில் எழுப்பிய கேள்விக்கான பதிலில் இதை அமைச்சர் தெரிவித்தார்.

விழுப்புரம் தொகுதி எம்பியான டி.ரவிக்குமார், ‘முதியோர் பென்ஷன் தொகை கடந்த 12 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பது அரசுக்குத் தெரியுமா? பட்ஜெட்டில் அதை உயர்த்தும் திட்டம் ஏதும் உள்ளதா? கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முதியோர் பென்சனுக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு?’ எனக் கேள்வி கேட்டிருந்தார்.

இக்கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியதாவது: இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் 60 முதல் 79 வயது வரையிலானவர்களுக்கு மாதம் ரூ.200 வழங்கப்படுகிறது.

2007-ம் ஆண்டு இது ரூ.75-லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 2011-ம் ஆண்டு முதல் ரூ.500 என உயர்த்தப்பட்டது. 15-வது நிதி குழு காலகட்டத்துக்கு (2021-26) இந்தத் தொகை குறித்து சீராய்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை இதே நிலையில் தொடர்வது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது. எனவே இதை உயர்த்தும் யோசனை அரசிடம் இப்போது இல்லை. ஆனால், மாநில அரசுகள் அதற்குமேல் உயர்த்திக் கொடுக்குமாறு நாங்கள் ஊக்குவிக்கிறோம். இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் சாத்வீயின் பதில் மீது திமுக எம்.பி டி.ரவிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தத் திட்டத்துக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது 2011-ம் ஆண்டில் ரூ.6596.47 கோடியும் அளிக்கப்பட்டது. 2012-ல் ரூ.7884.35 கோடியும், 2013-ல் ரூ.9112.46 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பட்ஜெட்டிலேயே இதற்கான நிதி ரூ.4180.98 கோடியாக முந்தைய ஆண்டில் ஒதுக்கப்பட்டதில் பாதியாகக் குறைக்கப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாகக் குறைத்துக்கொண்டே வரும் நிலை உள்ளது.

2021- 22-ம் ஆண்டுக்கு ரூ.5806.39 கோடி ஒதுக்கியுள்ளனர். 2022-23 பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்கு ரூ.6602.09 கோடி ஒதுக்கினர். இந்த ஆண்டுக்கான 2023-24 பட்ஜெட்டில் ரூ.6634.32 கோடி ஒதுக்கியுள்ளனர்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2013-ல் ஒதுக்கியதைவிட தற்போது ஒதுக்கியுள்ள தொகை 2478.14 கோடி குறைவாகும். இந்த நாட்டின் மூத்த குடிமக்களை இந்த அரசு எப்படி உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு இது பெரும் சான்று. ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால் மாநில அரசுகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கிறது. 2014-ம் ஆண்டு இந்தத் திட்டத்தை ஆராய்ந்த நாடாளுமன்ற எஸ்டிமேட் கமிட்டி ரூ.200 ஐ ரூ.300 ஆக உயத்தவேண்டும் எனப் பரிந்துரை செய்தது. அதற்குப் பின் சுமார் 10 ஆண்டுகளான பின்பும் இந்தத் தொகை உயர்த்தப்படாமல் ரூ.200 என்றே உள்ளது.’’ எனத் தெரிவித்த்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

38 mins ago

சினிமா

51 mins ago

விளையாட்டு

57 mins ago

வலைஞர் பக்கம்

10 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

46 mins ago

மேலும்