பிஹார் மக்களுக்கு நிதிஷ் துரோகம்: கூட்டணி முறிவு குறித்து பாஜக கருத்து

By செய்திப்பிரிவு

பாட்னா: “தற்போது பிஹாரில் நடந்துள்ளது மக்களுக்கும், பாஜகவுக்கும் இழைக்கப்பட்ட துரோகம்” என்று நிதிஷ் கூட்டணியை முறித்துக் கொண்டது குறித்து அம்மாநில பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியை முறித்துள்ள நிலையில், அது குறித்து முதல்முறையாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது. அம்மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறுகையில், "கடந்த 2020ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் போட்டியிட்டது.

அந்தத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றிருந்தாலும், நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி தரப்பட்டது. இன்று நடந்திருப்பது அனைத்தும் பிஹார் மக்களுக்கும் பாஜகவுக்கும் நடந்துள்ள துரோகம்” என்றார்.

முன்னதாக, பிஹார் மாநில முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் இன்று தனது கட்சி எம்எல்ஏக்களுடன் பாட்னாவில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், ஜேடியு - பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக முறைப்படி அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசும்போது, பாஜக எப்போதுமே ஐக்கிய ஜனதா தள தலைவர்களை அவமதித்து வந்ததாகவும், தங்கள் கட்சியை பல்வீனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் சாடினார்.

கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் 43 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால், நிதிஷ் குமாருக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் பாஜகவின் கை ஓங்கி இருந்தது. இதன் காரணமாக ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் போராட்டம் நடந்தபோது மத்திய அரசை, நிதிஷ் கட்சியினர் விமர்சித்தனர்.

பிஹார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு விழா அண்மையில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தொடர்பான மலரில் முதல்வர் நிதிஷ் குமார் படம் இடம்பெறவில்லை.

கடந்த 22-ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்குமாறு பாஜக விடுத்த அழைப்பையும் நிதிஷ் குமார் நிராகரித்தார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற விழாவிலும் நிதிஷ் பங்கேற்கவில்லை.

இதனிடையே, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அண்மைக்காலமாக நிதிஷ் குமாரை அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இரு கட்சிகளிடையே மீண்டும் நெருக்கம் அதிகரித்தது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ் குமார் மாலையில் ஆளுநரைச் சந்தித்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க அனுமதி கோரினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்