நவ்ஜோத் சித்துவுக்கு ஓர் ஆண்டு சிறை: 34 ஆண்டு கால வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காரை பார்க்கிங் செய்வதில் நடந்த மோதலில் 65 வயது நபர் பலியானது தொடர்பாக 34 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து சித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

சித்து சிறைக்குச் செல்வது உறுதியாகியுள்ளது.

கடந்த 1988 ஆம் ஆண்டு, நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது நண்பர் ரூபீந்தர் சாந்து ஆகிய இருவரும் பாட்டியாலாவைச் சேர்ந்த குர்மான் சிங் (65) என்பவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சித்து, குர்மான் சிங்கை காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியுள்ளார். இதில் குர்மான் சிங் காயமடைந்தார். பின்னர் அவர் உயிரிழந்தார். கைகலப்பாக ஆரம்பித்த மோதல் உயிர்ப் பலியில் முடிந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கு பல ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்து குற்றமற்றவர் என்று பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, சித்து பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார்.

பாட்டியாலா நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து குர்மான் சிங்கின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இந்த மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. அதேபோல் சித்துவும் "நான் அந்த நபரை அடித்தேன். ஆனால் ஒரே அடியில் யாரேனும் உயிரிழக்க முடியுமா?" என்று சந்தேகம் எழுப்பினார். ஆதாரங்கள் இல்லாததால் சந்தேகத்தின் பலனை அளித்து சித்துவை நீதிமன்றம் விடுவித்தது. ஆனால், அவர் மூத்த குடிமகனை தாக்கியது தவறு என்று கூறி, அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தது.

இந்நிலையில், குர்மான் சிங்கின் குடும்பத்தினர் தீர்ப்பை முன்வைத்து சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சித்துவுக்கு சற்றே கடினமான தண்டனையாவது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த சீராய்வு மனு இன்று (மே 19) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்