'இந்த ரோஜாப் பூவை வைத்து நான் என்ன செய்வது?' - உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர் ஆவேசம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்து பத்திரமாக நாடு திரும்பிய இந்திய மாணவர் ஒருவர், "எங்களை வரவேற்க ரோஜாப் பூவை கொடுத்தார்கள். இந்த ரோஜாப் பூவை வைத்து நான் என்ன செய்வது? இதற்கு மாறாக அமெரிக்காவைப் போல் எங்களை மிக முன்கூட்டியே எச்சரித்து வெளியேற்றியிருந்தால் இன்று இந்த வரவேற்புக்கு அவசியமே இருந்திருக்காது" என்று ஆவேசமாகப் பேசினார்.

பிஹார் மாநில மோத்திஹரி பகுதியைச் சேர்ந்த திவ்யன்ஷு சிங் என்ற மருத்துவ மாணவர் தாங்கள் எல்லை வந்து சேர்ந்த கதையை விவரித்திருக்கிறார். அதில் அவர், "நாங்கள் உக்ரைன் எல்லையைக் கடந்து ஹங்கேரி வந்த பின்னர்தான் எங்களுக்கு இந்திய தூதரகத்தின் உதவி கிடைத்தது. அதுவரை எங்களால் தூதரகத்தைச் சேர்ந்த யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகவே நானும் எனது நண்பர்கள் 10 பேரும் சேர்ந்து ஒரு குழுவாகக் கிளம்பினோம். நாங்கள் ரயிலில் ஏறியபோது அந்த ரயில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ரயிலில் இருந்த உள்ளூர்வாசிகள் எங்களுக்கு உதவினார்கள். எங்கோ சில இடங்களில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை உள்ளூர் மக்கள் உதவியாகவே இருந்தனர்.

ஒரு வழியாக நாங்கள் ஹங்கேரியை எல்லையை அடைந்தோம். இது எல்லாமே எங்களின் சொந்த முயற்சி. ஹங்கேரிக்குள் சென்ற பிறகே தூதரகம் எங்களுக்கு உதவியது. இங்கு வந்திறங்கியவுடன் எங்களுக்கு ரோஜா மலர் கொடுக்கப்பட்டது. இதை வைத்து நாங்கள் என்ன செய்யப்போகிறோம். அமெரிக்காவை போல் எங்களையும் மிக முன்கூட்டியே எச்சரித்திருக்கலாம். ஒருவேளை எங்களுக்கு அங்கு ஏதாவது ஆகியிருந்தால் எங்கள் பெற்றோரின் நிலை என்னவாயிருக்கும்.

நாங்களாகவே உரிய நேரத்தில் செயல்பட்டு எங்கள் சொந்த முயற்சியில் எல்லையை அடைந்ததால் தப்பித்திருக்கிறோம். சரியான நேரத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் இங்கு பூங்கொத்து கொடுக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது” என்றார்.

போர்ப் பகுதிகளில் இருந்து திரும்பிய மாணவர்கள் பலரும் அச்சம் விலகாமல் இன்னமும் கூட மரண பீதியில் இருக்கின்றனர். அவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என மனநல நிபுணர்கள் பரிந்துரைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

8 விமானங்களில் 3726 இந்தியர்கள்... - இதற்கிடையில் இன்று ருமேனியா, ஸ்லோக்கியா, ஹங்கேரியிலிருந்து 8 விமானங்கள் மூலம் 3,762 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்படுவார்கள் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். 798 இந்தியர்களுடன் 4 விமானப் படை விமானங்கள் இன்று ஹிண்டோன் விமானப்படை தளத்தில் தரையிறங்கின. 183 இந்தியர்களுடன் புக்காரெட்ஸ்டில் இருந்து ஒரு விமானம் மும்பை வந்து சேர்ந்தது.

தாயகம் திரும்பும் இந்தியர்களை அமைச்சர்கள் ’பாரத் மாதா கி ஜே’ என்ற கோஷத்துடன் ரோஜா மலர் கொடுத்து வரவேற்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்