இவை நல்லதல்ல... மாணவர் சமூகம் அமைதிகாக்க வேண்டும்: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவுரை

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ஹிஜாப் விவகாரத்தில் மாணவர் சமூகம் அமைதி காக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், இது தொடர்பான வழக்கை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர். ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தை தாண்டி தேசிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரம்.

இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பல்வேறு நபர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் தலைமையில் விசாரணை நடந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், "ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத பகுதியாகும். அதேபோல் ஒருவர் என்ன உடை அணிவது என்பது தனியுரிமைக்கான உரிமையின் ஒரு பகுதியாகும். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப், சிலுவைகள் போன்றவை நேர்மறை மதச்சார்பின்மையின் பிரதிபலிப்பு ஆகும்.

சில நாடுகள் எதிர்மறை மதச்சார்பின்மை என்ற கருத்தைப் பின்பற்றுகின்றன. இது மத அடையாளத்தை பொதுவில் காட்ட அனுமதிக்காது. இந்தியாவில் கடைபிடிக்கும் மதச்சார்பின்மை நேர்மறையான மதச்சார்பின்மை. நமது மதச்சார்பின்மை மரியாதை அடிப்படையிலானது. அரசு அனைத்து மதங்களையும் மதிக்கிறது.

பிராமணர்கள் இந்து மத அடையாளங்களுடன் பள்ளிக்குச் செல்கிறார்கள். அது பொது ஒழுங்கை பாதிக்கும் என்று ஒரு பள்ளி சொல்ல முடியுமா அல்லது சீக்கியர் அணிந்திருக்கும் தலைப்பாகை பொது ஒழுங்கை பாதிக்கிறது என்று அரசால் கூற முடியுமா? இஸ்லாமிய நம்பிக்கையின் ஒரு பகுதிதான் ஹிஜாப்" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீட்சித், "எல்லா உணர்ச்சிகளையும் ஒதுக்கி வையுங்கள். அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம். அரசியலமைப்பு சட்டம் எனக்கு பகவத் கீதை போன்றது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது நான் சத்திய பிரமாணம் செய்துள்ளேன்.

அந்த சத்தியத்தின்படி நடப்பேன். நாளை அனைவரும் வாதிடுவதற்கு அனுமதி கொடுக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாணவர் சமூகம் அமைதியைப் பேண வேண்டும். பொது மக்களின் நல்லொழுக்கத்தில் முழு நம்பிக்கை உள்ளது. அதுவே நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். போராட்டம் நடத்துவது, வீதியில் செல்வது, கோஷம் எழுப்புவது, மாணவர்களைத் தாக்குவது, மாணவர்கள் பிறரைத் தாக்குவது, இவையெல்லாம் நல்லதல்ல. டிவியில் நெருப்பையும் ரத்தத்தையும் பார்த்தாலே நீதிபதிகள் மனம் கலங்குவார்கள். மனம் கலங்கினால் புத்தி வேலை செய்யாது. நான் நாளை இந்த வழக்கை விசாரிப்பேன். அமைதியாக இருங்கள்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, ஹிஜாப் விவகாரத்தில் எதிர்வினை என்ற பெயரில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்த நிலையில், கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்