தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 மாதம் அவகாசம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கக் கோரி மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி சங்கர் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை செப்.15-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது. புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த கூடுதலாக 7 மாதம் அவகாசம் வழங்கக் கோரி கடந்த ஆண்டு செப்.4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய் திருந்தது.

அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்பி, எம்எல்ஏக்கள் தேர்தலை முழுவீச்சில் நடத் தும்போது உள்ளாட்சித் தேர்தலை மட்டும் நடத்த முடியாதா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும், தேர்தலுக்கு காலஅவகாசம் வழங்குவதில் ஆட்சேபணை உள்ளதா என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரர் சங்கருக்கு உத்தரவிட்டிருந்தது. அவகாசம் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மாநில தேர்தல் ஆணை யம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘‘தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள், 28 நகராட்சிகள் உரு வாக்கப்பட்டுள்ளன. 4 மாநகராட்சி மற்றும் 3 நகராட்சிகளின் எல்லைகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்னும் கரோனா பாதிப்பு இருப்பதாலும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவ மழைக் காலம் என்பதாலும் தேர்தலை நடத்துவதில் சிரமம் ஏற்படும். எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 2022 ஏப்ரல் இறுதி வரை காலஅவகாசம் வழங்க வேண்டும்’’ என கோரினார்.

அதையேற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி கடந்த செப்.27-ல் உத்தரவிட்டனர். அந்த காலக்கெடு வரும் ஜன.27-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், தற்போது கரோனா காலகட்டமாக இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கக் கோரி மனுதாரரான சங்கர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் கருத்து

இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரிய ஓய்வுபெற்ற இணை இயக்குநர் நக்கீரன், சென்னை மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சை நிறுவன ஓய்வு பெற்ற இயக்குநர் பாண்டியராஜ் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பி.எஸ்.ராமன் ஆகியோர் ஆஜராகி, ‘‘தற்போதைய சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது உசிதமாக இருக்காது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கரோனா அலை இன்னும் தீவிரமடையும்’’ என வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஏற்கெனவே 5 மாநில தேர்தல்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. இதுதொடர்பான வழக்கும் ஏற் கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி நீங்கள் உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்’’ என கருத்து தெரிவித்து விசாரணையை இன்று (ஜன.25) தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

41 mins ago

ஓடிடி களம்

43 mins ago

விளையாட்டு

58 mins ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்