உ.பி.யில் பிராமணர் வாக்கை பெறுவதில் போட்டி: முன்னாள் அமைச்சர் தலைமையில் குழு அமைத்தது பாஜக

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பிராமணர் வாக்குகளை பெறுவதில் முக்கிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இதில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தலைமையில் 4 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் பிராமண சமூகத்தினருக்கு சுமார் 12% வாக்குகள் உள்ளன. அங்கு யாதவர், முஸ்லிம் மற்றும் தாக்குரைப் போல் இவர்களும் முக்கிய வாக்கு வங்கியாக உள்ளனர். பிராமணர் வாக்குகளை பெறும் கட்சி உ.பி.யில் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து நிலவுகிறது. எனவே ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை பிராமணர் வாக்குகளை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதில் பாஜக தேசிய தலைமை முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஷிவ் பிரதாப் சுக்லா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.

நொய்டா எம்.பி. மகேஷ் சர்மா, மாநிலங்களவை எம்.பி.யான குஜராத்தின் ராம் பாய், முன்னாள் இளைஞர் பிரிவின் தேசியச் செயலாளர் அபிஜித் மிஸ்ரா ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் உ.பி.யின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று முக்கிய பிராமணர்களை சந்தித்துப் பேச உள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பாஜக மூத்த தலைவர் ஷிவ் பிரதாப் சுக்லா கூறும்போது, “நாங்கள் பிராமணர்களுக்கு எதையும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றன. தற்போது உ.பி. பாஜக எம்எல்ஏ.க்களில் 67 பேரும், இங்கிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களில் 5 பேரும் பிராமணர்கள் ஆவர். எங்கள் குழுஉ.பி.யின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிராமணர்களின் தேவைகளை கேட்டு பூர்த்தி செய்யும்” என்றார்.

உ.பி.யைச் சேர்ந்த பிராமணர் சமூக எம்எல்ஏ, எம்.பி. மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினர். அதன் பிறகு இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் இந்த முறை, பிராமணர்களை குறி வைத்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி முதன்முறையாகக் கூட்டங்களை தொடங்கினார். அவர் தனது கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான பிராமண சமூகத்தின் சதீஷ் சந்திர மிஸ்ராவை வைத்து உ.பி. முழுவதிலும் கூட்டங்கள் நடத்தினார். இதில் அவர், பிராமணர்களை பாஜக புறக்கணிப்பதாக கடுமையாக விமர்சித்து வந்தார்.

அடுத்து உ.பி.யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ்சிங் யாதவும் பிராமணர்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கினார். அயோத்தி ராமரை முன்னிறுத்தும் பாஜகவுக்கு போட்டியாக பரசுராமரை அகிலேஷ் முன்னிறுத்தி வருகிறார். லக்னோவில் பரசுராமர் கோயில் கட்டிய அகிலேஷ் நேற்று முன்தினம் சிறப்பு பூஜையும் செய்திருந்தார். உ.பி.யில் மீண்டும் செல்வாக்கு பெற முயற்சிக்கும் காங்கிரஸும் தனது பங்குக்கு பிராமணர்களுக்கு ஆதரவாகப் பேசி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

43 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்