ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பதான்கோட் விமானப்படை தளத்தில் நாளை விசாரணை: டெல்லி வந்தது பாகிஸ்தான் கூட்டுக் குழு

By பிடிஐ

பதான்கோட் விமானப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான 5 பேர் கொண்ட பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு நேற்று டெல்லி வந்தடைந்தது. இக்குழு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுடன் இணைந்து நாளை பதான்கோட் சென்று விசாரணையை தொடங்கவுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் புகுந்து கடந்த ஜனவரி 2-ம் தேதி பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 4 பேர் தாக்குதல் நடத்தினர். 80 மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டாலும், பாதுகாப்பு படையினர் 7 பேர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா நிர்ப்பந்தித்தது. மேலும் இதுதொடர்பான ஆதாரங்களையும் வழங்கி இருந்தது.

இதன் காரணமாக தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் தரப்பில் 5 பேர் கொண்ட கூட்டு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவுக்கு இந்தியா விசா வழங்கியதை அடுத்து, தனி விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தடைந்தது. அவர்களை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வரவேற்றனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தீவிரவாத தடுப்பு தலைவர் முகமது தாஹிர் ராய் தலைமையில், லாகூரின் உளவுத் துறை துணைத் தலைவர் முகமது அசிம் அர்ஷத், ஐஎஸ்ஐ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தன்வீர் அகமது, ராணுவ உளவுத் துறை அதிகாரி லெப்டினென்ட் கர்னல் இர்பான் மிர்சா மற்றும் குஜரன்வாலா தீவிரவாத தடுப்பு துறையின் விசாரணை அதிகாரி ஷாஹித் தன்வீர் ஆகியோர் இந்த கூட்டு விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

என்ஐஏ அலுவலகத்தில் ஆலோசனை

இக்குழு டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமையகத்துக்கு இன்று செல்கிறது. அப்போது பதான்கோட் தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தகவல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை அவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் வழங்குவர். மேலும் திட்டமிட்ட வகையில் பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்து இந்த தாக்குதலை நடத்தியதற்கான ஆதாரங்களையும் அவர்களிடம் வழங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாளை காலை சிறப்பு விமானம் மூலம் பாகிஸ்தான் குழுவினர் பதான்கோட் விமானப்படை தளத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர். அங்கு தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் சண்டை நடந்த இடங்களை அவர்களுக்கு, இந்திய அதிகாரிகள் காண்பிக்கவுள்ளனர்.

தகவல்கள் பரிமாற்றம்

தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள் 4 பேரில் 2 பேரின் அடையாளம் தெரியவந்திருப்பதால் அது தொடர்பான தகவல்கள் மற்றும் தாக்குதலின் போது தீவிரவாதிகள் கொண்டு வந்த உணவுப் பொட்டலங்கள், நவீன கருவிகள் ஆகியவற்றையும் பாகிஸ்தான் குழுவினரிடம் என்ஐஏ அதிகாரிகள் விளக்கவுள்ளனர்.

மேலும் ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் உட்பட இந்த தாக்குதலுக்கு உதவிய நபர்களின் தொலைபேசி எண்கள், தீவிரவாதிகளுக்கு அவர்கள் விநியோகித்த உணவுப் பொட்டலங்கள், ஊட்டச்சத்து பானங்கள் ஆகியவையும் பாகிஸ்தான் விசாரணை குழுவின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.

தீவிரவாத சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு பாகிஸ்தான் குழு இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்