‘‘சமமான வாய்ப்புகளை பெற கால அவகாசம் வேண்டும் என இளம்பெண்கள் விரும்புகிறார்கள்’’- திருமண வயது 21 குறித்து பிரதமர் மோடி பேச்சு

By செய்திப்பிரிவு

பிரயாக் நகர்: படிப்பைத் தொடர்வதற்கும், சமமான வாய்ப்புகள் பெறுவதற்கும் கால அவகாசம் வேண்டும் என்று இளம்பெண்கள் விரும்புகிறார்கள், எனவே பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.
உ.பி.யின் பிரயாக் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,000 கோடி நிதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

பிரயாக்ராஜ் என்பது கங்கை-யமுனை-சரஸ்வதி ஆகியவை சங்கமிக்கும் பகுதி, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அன்னை சக்தியின் அடையாளம். இந்தப் புனித நகர் என்று பிரம்மாண்டமாக பெண்கள் சக்தியின் சங்கமத்தைக் காண்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் மகளிருக்கு அதிகாரமளிக்கும் பணிகளை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தின் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனாளி இளம்பெண்களின் கணக்குகளுக்கு பல கோடி ரூபாயை அவர் பரிமாற்றம் செய்த, முதலமைச்சரின் இளம்பெண்கள் நல்வாழ்வுத் திட்டம் போன்ற திட்டங்கள் ஊரக ஏழைகளுக்கும், இளம்பெண்களுக்கும் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசால் பெண்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு, கௌரவம், மதிப்பு ஆகியவை முன்னெப்போதும் காணப்படாதவை. முந்தைய சூழ்நிலைகள் திரும்புவதை அனுமதிப்பதில்லையென்று உத்தரப்பிரதேசப் பெண்கள் முடிவு செய்துள்ளனர். பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம் இயக்கத்தின் மூலம் பாலினத்தை அறிந்து கருச்சிதைவு செய்வதைத் தடுப்பதற்கு சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்ப அரசு முயற்சி செய்து வருகிறது.

இதன் விளைவாக பல மாநிலங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கருவுற்றப் பெண்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனூட்டுதல், மருத்துவமனைகளில் மகப்பேறு, கருவுற்ற காலத்தில் ஊட்டச்சத்து ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது. பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் கருவுற்ற காலத்தில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.5000 டெபாசிட் செய்யப்படுகிறது. இதனால் முறையான உணவால் அவர்கள் தங்களை கவனித்துக் கொள்ள முடியும்.

பெண்களின் கௌரவத்தை அதிகரிக்க வகைசெய்யும் பல நடவடிக்கைகளைப் பிரதமர் பட்டியலிட்டார். தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கோடிக்கணக்கான கழிப்பறைகள் கட்டியது, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு வசதி, வீடுகளுக்கே குழாய் மூலம் குடிநீர் வசதி ஆகியவற்றுடன் சகோதரிகளின் வாழ்க்கையில் புதிய வசதியும் வருகிறது.

பல பத்தாண்டுகளாக வீடும், சொத்துக்களும் ஆண்களின் உரிமை மட்டும் என்று கருதப்பட்டு வந்தது. அரசின் திட்டங்கள் இந்த சமத்துவமின்மையை நீக்கியிருக்கிறது. இதற்குப் பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் மிகப் பெரிய உதாரணமாகும். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் பெண்களின் பெயரிலேயே கட்டப்படுகின்றன.

வேலைவாய்ப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களிலும், குடும்பத்தில் வருவாய் அதிகரிப்பிலும் பெண்கள் சமபங்காளிகளாக இருக்கின்றனர். இன்று, முத்ரா திட்டம் புதிய பெண் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துகிறது. கிராமங்களில் உள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூட இதில் பயன்பெறுகிறார்கள்.

தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஊரக அமைப்புகளிலும் பெண்கள் இணைக்கப்படுகின்றனர். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் சாம்பியன்களாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் சகோதரிகளை நான் கருதுகிறேன். இந்த சுயஉதவிக் குழுக்கள் உண்மையில் தேசிய உதவிக் குழுக்களாகும்.

ஏற்கெனவே ஆண்களின் திருமணத்திற்கு சட்டப்படியான வயது 21 ஆக இருந்தது. ஆனால் பெண்களின் திருமணத்திற்கு மட்டும் 18 வயது என இருந்தது. தங்களின் படிப்பைத் தொடர்வதற்கும், சமமான வாய்ப்புகள் பெறுவதற்கும் கால அவகாசம் வேண்டும் என்று இளம்பெண்கள் விரும்புகிறார்கள். எனவே இளம்பெண்களுக்கு திருமணத்தின் சட்டப்படியான வயதை 21 ஆகக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்யப்படுகின்றன.

பெண்களின் நலன் கருதி நாடு இந்த முடிவை எடுத்திருக்கிறது. உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகள் ராஜ்ஜியம் ஒழிக்கப்பட்டதால் மிகப் பெரிய பயனாளிகள் உத்தரப்பிரதேசத்தின் சகோதரிகளும் மகள்களும்தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாராட்டுகிறேன்.

உத்தரப்பிரதேசத்தில் இப்போது பாதுகாப்பும், உரிமைகளும் இருக்கின்றன. உத்தரப்பிரதேசம் இன்று வாய்ப்புகளையும், வணிகத்தையும் கொண்டிருக்கிறது. நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்த்துகள் இருப்பதால் இந்தப் புதிய உத்தரப்பிரதேசத்தை எவராலும் இருட்டுக்குள் தள்ள முடியாது என்பதில் நான் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்