பஞ்சாப், ஹரியாணா, டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By செய்திப்பிரிவு

விவசாயிகளின் முழு அடைப்பால் பஞ்சாப், ஹரியாணா, டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு தினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் தேசிய கொடியை அகற்றிவிட்டு சீக்கியர் கொடி ஏற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விவசாயிகளின் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஏராளமான புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் அரசுகளுக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்களுக்கு ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

இந்த பின்னணியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்.27-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது.

இதன்படி நாடு முழுவதும் விவசாயிகள் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் 10 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.

பஞ்சாப், ஹரியாணாவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளும் முடங்கின. இரு மாநிலங்களிலும் சாலை மறியல், ரயில் மறியல், சுங்கச்சாவடிகளை கைப்பற்றுதல் உள்ளிட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். இதன் காரணமாக மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது.

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், மேற்குவங்கம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஆங்காங்கே விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தின. ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, இடதுசாரி கட்சிகள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தன.

பாரதிய கிசான் சங்க செய்தித்தொடர்பாளர் ராகேஷ் டிகைத் கூறும்போது, "எங்களது முழுஅடைப்பு போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 25 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். அமைதி வழியில் போராட்டத்தை நடத்தினோம். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. டெல்லியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்காக வருந்துகிறேன். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்