உடலியல் அம்சங்கள் உரிமைகளை கட்டுப்படுத்துமா?

By செய்திப்பிரிவு

"ராணுவத்தில் பெண்களை உயர் பதவிகளில் அமர்த் தாமல் இருப்பதற்கு 101 காரணங்களை தேடாதீர்கள்; பெண்களுக்கு உயர் பதவி வழங்காமல் இருப்பதற்கு நாங்கள் எந்த காரணத்தையும் இந்த வழக்கில் பார்க்க இயலவில்லை உங்களுடைய ஆணாதிக்க மனப்பான்மையை தவிர! உடல் சார்ந்த விஷயங்களை வைத்து பெண்களின் உரிமை சார்ந்த விஷயங்களை நிர்ணயிக்க முடியாது; பாலின பாகுபாடு பார்ப்பதற்கு அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆண்களின் கோட்டையான ராணுவத்தில் நீண்ட காலம் பெண்கள் நுழைய இயலவில்லை. இதற்கு உடல் பலம் ஒரு காரணமாக காட்டப்பட்டது. சட்டம் மாறிய போதும் சமூக கண்ணோட்டம் மாறவில்லை.

பிறக்கும் போதே பெண்கள் உடல் பலம் அற்றவர்களாக பிறப்பதில்லை; வளர்க்கப்படும்போதுதான் பாரபட்சம் காட்டப்படுகிறது. உடல் பலத்துக்கு தேவையான நல்ல உணவு, கடினமான வேலை அதற்கான வாய்ப்பு என்பது சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளுக்கு கிடைத்து விடுகிறது. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதிகளின்படி இந்த சமூகத்தால் வார்க்கப்படுகிறார்கள்.

முப்படைகளில் பெண்கள் முதலில் மருத்துவராகவும் செவிலியர் ஆகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். 1990-களில், போர்முனை தவிர மற்ற துறைகளில் (இன்ஜினியரிங், எலக்ட்ரிகல், சட்டம், கல்வி, சிக்னல்) சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். ஐந்து வருடம் முதல் 14 வருடம் வரை பணியில் தொடரலாம். ஆண்கள் மட்டும் நிரந்தர ஆணையத்தின் மூலம் பதவி உயர்வு பெற்று ஓய்வுக் காலம் வரை பணி புரியலாம். ஆனால், ஒரே நாளில் பெண்கள் வேலை இல்லாத பட்டதாரி ஆகி விடுவார்கள். இந்தக் குறுகிய கால ஆணையத்தில் பணி புரிந்தவர்களுக்கு பென்ஷன் மற்றும் இதர சலுகைகள் கிடையாது.

இந்த பாரபட்சத்தை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பெண்களுக்கும் நிரந்தர ஆணையம் மூலம் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் இதற்கும் உடல் பலத்துக்கும் தொடர்பு இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது.

ஆனால் 2018 சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ராணுவத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று முழங்கினார். ஆனால் முப்படைகளுக்கும் தளபதியான பிபின் ராவத் "ராணுவத்தில் பணி புரிய பெண்களுக்கு தகுதி கிடையாது; பெண்களுடைய பிரதான கடமை பிள்ளை பெறுவதும் அதை பேணுவதும்தான்; கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு விடுப்பு அளிக்க முடியாது; ஆணையிடும் பொறுப்பில் பெண்கள் அமர்த்தப்பட்டால் அதற்கு ஆண்கள் அடிபணியும் மனநிலையில் இல்லை" என்று ஒரு போடு போட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் அரசுத் தரப்பும் இந்த பத்தாம் பசலித் தனமான கருத்துகளை முன்வைத்ததுதான் நீதிபதிகளுக்கு கோபமூட்டியது.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்வதற்காக ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தக்கூடிய தேர்வில் பெண்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மீண்டும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு இடைக்கால உத்தரவை வழங்கியது. "உங்கள் பாலின பாரபட்ச த்துக்கு ஒரு அளவே இல்லையா? ஒவ்வொரு முறையும் நாங்கள்தான் தலையிட வேண்டுமா?" என்று உச்ச நீதிமன்றம் சலித்துக் கொண்டது.

ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள், தாங்கள் போர் முனைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் விண்வெளி ஓடங்களில் பெண்கள் பயணிக்கும்போது தங்களுக்கு ஏது எல்லை என்றும் முழங்குகின்றனர். விமானப்படையில் ஏற்கெனவே பெண்கள் போர் முனைக்குச் செல்கிறார்கள். பெண்களாலேயே இயக்கப்படும் இந்திய கப்பல் ஒன்றும் இன்று உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில்தான் தமிழ்நாட்டில் பெண் காவலர்களுக்கு அளிக்கப்பட்ட சில சலுகைகளை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. பந்தோபஸ்து பணிகளுக்குச் செல்பவர்களுக்கு நடமாடும் கழிப்பறைகள், தங்குமிடம், உணவு, ஷிப்டு முறையில் வேலை என்ற மாற்றங்களை கொண்டு வரலாம். இது ஆண் காவலர்களுக்கும் பொருந்தும். இது போன்ற புறச் சூழ்நிலை மாற்றங்கள் பெண்களுக்கு தைரியத்தையும் அதிகாரத்தையும் கொடுக்கும் என்ற திசையிலும் தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்