பிப்ரவரி 9-ல் இட்ட கோஷம் தேச விரோதமானதல்ல: காலீத், அனிர்பனிடம் தொடரும் விசாரணையில் வாதம்

By ஆர்.ஷபிமுன்னா

ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தின் பிப்ரவரி 9-ம் தேதி சம்பவத்தில் தாம் இட்ட கோஷங்கள் தேசவிரோதமானவை அல்ல என கைதாகியுள்ள உமர் காலீத் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா வாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த இருவரும் மூன்று நாள் போலீஸ் விசாரணையில் உள்ளனர்.

கடந்த பிப்ரவரி 9-ல் அப்சல் குருவின் நினைவு நாள் ஜே.என்.யூ வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிருந்து நடத்தியதாக ஆய்வு மாணவர் காலீத் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா உட்பட ஐந்து மாணவர்களை டெல்லி போலீஸார் தேடி வந்தனர்.

இவர்களில் காலீத் மற்றும் அனிர்பன் கடந்த 23-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு சரணடந்தனர். ஜே.என்.யூயின் தெற்கு பகுதி வளாகக் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட இருவரும் அங்கு தற்காலிகமாக கூடிய பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்கு, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது காரணம் ஆகும்.

தற்காலிக நீதிமன்றமாக மாறிய காவல்நிலையம் குறித்த தகவல் அதன் வெளியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதில் இருவரையும் மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போலீஸ் வட்டாரம் கூறுகையில், ’காலீத் மற்றும் அனிர்பன் இருவரும் விசாரணைக்கு ஓரளவிற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இருவரும் தாம் இட்ட அப்சல் குருவிற்கு ஆதரவான கோஷங்கள் தேசவிரோதமானவை அல்ல என கடுமையான வாக்குவாதம் செய்தனர். சம்பவம் நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோவில் வெளியில் இருந்து வந்தவர்களை அடையாளம் காட்டினர்’ எனத் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று நடைபெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சியில் தேசவிரோதம் உட்பட 29 கோஷங்கள் எழுப்பப்பட்டதாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் ஆதாரமாக இந்தி செய்தி தொலைக்காட்சி சேனலான ஜீ நியூஸின் வீடியோ ஆதாரத்தையும் சேர்த்துள்ளனர். இதில், 28 கோஷங்களை சம்பவம் நடந்த அன்று நிகழ்ச்சியில் இடப்பட்டதாக ஒப்புக் கொண்ட இரு மாணவர்களும் கடைசி ஒன்றான ‘பாகிஸ்தான் வாழ்க’ என்பதை மட்டும் தாம் இடவில்லை என மறுத்துள்ளனர்.

இதில், காஷ்மீரில் ராணுவம் அமர்த்தல் மற்றும் அப்சல் குருவின் மரண தண்டணை ஆகியவைகளுக்கு தான் எதிர்ப்பதாக காலீத் கூறியதாக தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஒருமுறை கூட தாம் சென்றதில்லை எனவும் காலீத் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இருவரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் பிப்ரவர் 9-ல் நடந்த நிகழ்ச்சிக்கும் தாம் தான் காரணம் எனவும், மற்ற மாணவர்கள் எவரும் இதில் சம்மந்தப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் வீடியோவை திரையிட்டுக் காட்டிய போலீஸார் அதில் உள்ள மாணவர் மற்றும் வெளியில் இருந்து வந்த நபர்களையும் அடையாளம் காட்டுமாறு வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான செலவுத்தொகைக்கு நிதி அளித்தது குறித்தும் கேள்வி எழுப்பிய போலீஸார் அதில் வெளிநாடுகளின் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இருவரையும் ஏற்கனவே கைதான மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமாருடன் நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இருவரில் காலீத், கடந்த ஆறு வருடங்களாக ஜே.என்.யூவில் எம்.ஏ வரலாறு அதே துறையில் எம்.பில் முடித்து சமூகவியல் துறையில் முனவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வு மாணவராக உள்ளார். சமூகவியல் துறையில் காலீத்தின் ஆய்வு ஜார்கண்ட் மாநில பழங்குடிகள் மீது நடந்து வருகிறது.

மற்றவரான அனிர்பன் பட்டாச்சார்யா வரலாற்றுத்துறையில் ஐந்தாம் ஆண்டு ஆய்வு மாணவராக பயில்கிறார். இவர்களுடன் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இடம் பெற்ற அசுதோஷ் குமார், ராமா நாகா மற்றும் அனந்த் பிரகாஷ் ஆகிய மூவரும் போலீஸாரிடம் இன்னும் சரணடையவில்லை. இவர்கள் ஜே.என்.யூ வளாகத்திலேயே உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

11 mins ago

தமிழகம்

48 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

12 hours ago

மேலும்