12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரும் மனு: வரும் 31-ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம் 

By பிடிஐ

கரோனா வைரஸ் பரவல் காலத்தில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தாமல் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 31-ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் மம்தா சர்மா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

''நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்லைனில் அல்லது நேரடியாகத் தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுதச் செய்வதும் கடினமானது,

ஏனென்றால் எப்போதுமில்லாத சூழலைச் சந்தித்து வருகிறோம். 12-ம் வகுப்புத் தேர்வுகளை நடத்தாமல் தள்ளிப் போடுவதும், முடிவு ஏதும் எடுக்காமல் இருப்பதும் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும்பட்சத்தில் அது கல்வியை பாதிக்கும்.

ஆதலால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அப்ஜெக்டிவ் முறையில் முடிவுகளை அறிவிக்க வேண்டும். 12-ம் வகுப்புத் தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தொடர்ந்து தாமதம் செய்வது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.

10-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, 12-ம் வகுப்புத் தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது மாணவர்களுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், தன்னிச்சையாக, மனிதநேயமற்ற முறையில் எந்த முடிவும் எடுக்காமல் அப்பாவி மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடக் கூடாது.

ஆதலால், 12-ம் வகுப்புத் தேர்வுகளை ரத்துசெய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு மனுதாரரிடம், உங்கள் மனுவின் நகல் ஒன்றை மத்திய அரசு, சிபிஎஸ்இ, ஐஎஸ்சிஇ வாரியத்துக்கு அனுப்பி வையுங்கள் என்றனர்.

அதற்கு மனுதாரர் வழக்கறிஞர் ஏற்கெனவே இரு வாரியங்களுக்கும் மனுவின் நகலை அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் அமர்வு, “இந்த வழக்கை வரும் 31-ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறோம். 12-ம் வகுப்புத் தேர்வுகள் குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் சிபிஎஸ்இ ஏதேனும் முடிவுகள் எடுக்கலாம். அதனால் திங்கள் கிழமைக்குள் ஏதும் நடக்காது” எனத் தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு, “எதையும் சாத்தியக் கண்ணோட்டத்தோடு அணுகுங்கள். திங்கள் கிழமைக்குள் ஏதேனும் தீர்வுகள் கிடைக்கலாம். ஆதலால், திங்கள் கிழமை அன்று விசாரணைக்கு எடுக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்