படேல் சிலையை பார்வையிட்ட 50 லட்சம் பேர்: குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லப பாய் படேல் சிலையை இதுவரை 50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

‘இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல், நாட்டின் முதல் துணை பிரதமர், முதல் உள்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். நாடு சுதந்திரம் அடைந்தபோது பல்வேறு பகுதிகளாக பிரிந்திருந்த இந்தியாவை ஒன்றிணைத்தவர். அவரது சொந்த மாநிலமான குஜராத்தில், நர்மதை நதியில் சர்தார் சரோவர் அணையில் இருந்து 3.2 கி.மீ. தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் ரூ.3,000 கோடியில் 182 மீட்டர் உயரத்தில் அவருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒற்றுமையின் சிலை என்று பெயர்சூட்டப்பட்டிருக்கிறது. இது உலகின் மிக உயரமான சிலையாகும்.

இந்த வளாகத்தில் நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா, டைனோசர் பூங்கா, கண்காட்சி மையம் உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2018 அக்டோபர் 31-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சர்தார் படேல் சிலையை திறந்து வைத்தார். சில மாதங்களிலேயே உலகின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இது உருவெடுத்தது.

சுற்றுலா பயணிகளை ஈர்க்க படேல் சிலையை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சர்தார் சரோவர் அணைக்கட்டு சுற்றுலா, படகு சவாரி, பறவைகளை பார்வையிடுவது உள்ளிட்ட அம்சங்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சர்தார் படேல் சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம், கேவாடியாவுக்கு நேரடி ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து சர்தார் படேல் சிலையை பார்வையிட வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக குஜராத் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் குப்தா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஒற்றுமையின் சிலை சர்வதேச சுற்றுலா தலமாக புகழ் பெற்றுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் இந்த இடம் கவர்ந்து இழுக்கிறது. இதுவரை 50 லட்சம் பேர் சர்தார் படேல் சிலையை பார்வையிட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்