தொழிலை மையப்படுத்தி தடுப்பூசி செலுத்தப்படவில்லை: நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

By செய்திப்பிரிவு

நீதித்துறையைச் சேர்ந்தவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசியை செலுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.

அதில், "நாட்டின் சுகாதாரத் துறையையும், பெருந்தொற்றுக்கு எதிராக போராடுபவர்களையும் பாதுகாக்கும் பொருட்டே, அவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்த பின்னர் நீதிபதிகள் கூறுகையில், “நாட்டின் மூன்று தூண்களில் நீதித்துறையும் ஒன்று.கரோனா தொற்றால் நீதித்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறது. பெருந்தொற்று பாதிப்பால் வழக்குகள் தேங்கிகிடப்பதை யாராலும் மறுக்க முடியாது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நீதிமன்றங்களில் கூடுகின்றனர். இதனால் நீதித்துறையினர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த விவகாரத்தில் தொழில்களை ஒப்பிட்டு பார்ப்பது சரியாக இருக்காது" எனக் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:

பெருந்தொற்று காலத்தில் நாட்டு மக்களின் தேவையை அரசு உணர்வுப்பூர்வமாக அணுகுகிறது. அதுமட்டுமின்றி, கரோனாதடுப்பூசியை செலுத்தும் விவகாரத்தில், உலக நாடுகளுக்கே இந்தியா முன்னோடியாக இருக்கிறது. மக்களின் தொழில்களை மையமாக வைத்து கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை; மாறாக, மக்களில் எந்தப் பிரிவினர் எளிதில் தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்பதை பொறுத்தே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

வயது முதிர்ந்தவர்கள், பெருந்தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் உள்ளவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்தப்பிரிவுகளின் கீழ் வரும் நீதித்துறையினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த கட்டங்களாக, அனைத்து தரப்பினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

இவ்வாறு துஷார் மேத்தா கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

34 mins ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்