தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மராத்திய இடஒதுக்கீட்டை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வழக்கு அரசியல் சாசனஅமர்வில் விசாரிக்கும்போது, தமிழகத்தின் இடஒதுக்கீட்டுக்கு எதிரானமனுவையும் விசாரிக்கக் கோரியதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்குக் கல்வி , அரசுப் பணிகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம் எனச் சட்டம் இயற்றப்பட்டு, இது அரசியலமைப்புச் சட்டத்தன் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்துவதிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீதம், பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என இட ஒதுக்கீடு முறை வழங்கப்படுகிறது.

இதை எதிர்த்து கடந்த 2012-ம் ஆண்டில் காயத்ரி எனும் மாணவி தனது வழக்கறிஞர் ஜி.சிவபாலமுருகன் சார்பில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மகாராஷ்டிராவில் 65 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் 8-ம் தேதி முதல் நீதிபதி பூஷன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்அமர்வு விசாரிக்கி்றது. இந்த வழக்கை வரும் 18ம் தேதிக்குள் முடிக்க நீதிபதிகள் அமர்வு திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கோடு சேர்த்து தமிழகத்தின் 69 இடஒதுக்கீடு மனுவையும் விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

மனுதாரர்கள் மனுவில் " “தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டைக் கல்வி, அரசுப் பணிகளிலும் வழங்குவது தன்னிச்சையானது, அர்த்தமில்லாதது, அளவுக்கு மீறியது. கூடுதலாக இட ஒதுக்கீடு அளவு என்பது பொதுப்பிரிவில் உள்ள மாணவர்கள், அரசுப் பணிக்குச் செல்வோரைப் பாதிக்கும்.

உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்திரா ஷானே வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக தமிழக அரசின் சட்டம் இருக்கிறது. அந்தத் தீர்ப்பில் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தமிழக அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீடு சட்டம் 1993, இந்திரா ஷானே வழக்கில் அளித்த தீர்ப்பின்படி இல்லை என்பதால், அதை அரசியலமைப்புச் சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் எஸ்இபிசி சட்டம் 2018, 65 சதவீதத்துக்கும் அதிகமாக இட ஒதுக்கீடு செல்லும்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோ அதேபோன்று தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தினேஷ் எனும் மாணவரும் மனுத்தாக்கல்செய்திருந்தார். இந்த மனுக்கள் ஒன்று சேர விசாரிக்கப்பட்டன.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷான், சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது.

அப்போது தமிழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகல் ரோகத்கி, சேகப் நாப்டே,யோகேஷ் கண்ணா ஆஜராகினர்.

மனுதாரர் காயத்ரி தரப்பில் வழக்கறிஞர் சிவபாலமுருகன், தினேஷ் தரப்பில் மீனாட்சி அரோரா, மற்றும் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகினர்.

தமிழகத்தின் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வாதிடுகையில் " தமிழக்தில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதுல் இந்த வழக்கைத் தேர்தல் முடிந்தபின் விசாரிக்க வேண்டும். தமிழக அரசு சாதிவாரியாக நடத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில்தான் இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டு குடியரசு தலைவர் கையொப்பம் பெறப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தால் விசாரிக்க இயலாது. மராத்திய இடஒதுக்கீடு வழக்கும், தமிழகத்தின் இடஒதுக்கீடு வழக்கும் வெவ்வேறானவை.இதை ஒப்பிடுவதை கடுமையாக எதிர்க்கிறோம். இருவழக்கையும் தனித்தனியாக விசாரிக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

காயத்ரி தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள், மனிந்தர் சிங், மீனாட்சி அரோரா ஆகியோர் வாதிடுகையில், " தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது, தன்னிட்சையானது, அதிகமானது. இந்த கூடுதல் இடஒதுக்கீடு என்பது, பொதுப்பிரிவில் உள்ள மாணவர்களுக்கும், வேலைவாய்ப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். 9 நீதிபதிகள் கொண்ட நீதிபதி இந்திரா சாஹ்னி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்புக்கு விரோதமானது. இந்த வழக்கை மராத்தியஇடஒதுக்கீடு வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வோடு சேர்த்து விசாரிக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி அசோக் பூஷான், சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு, " மராத்திய இடஒதுக்கீடு வழக்கோடு சேர்த்து தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கையும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மராத்திய இடஒதுக்கீடு வழக்கு முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டபின், அதன்பின் இந்த வழக்கு விசாரிக்கப்படும். ஆதலால், மனுதாரர் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்