புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள் ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமித் ஷா, நரேந்திர சிங் தோமர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் வலுத்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக போராட டெல்லிக்கு படையெடுத்த ராஜஸ்தான், ஹரியாணா மாநில விவசாயிகளை எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 17-வது நாளை எட்டியுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தலைநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளுக்கு அரசு வழங்கிவரும் குறைந்தபட்ச ஆதரவு விலைநடைமுறையில் எந்த மாற்றமும் இருக்காது என பேச்சுவார்த்தையின்போது, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. விவசாயிகள் கூறும் திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த வாக்குறுதிகளை ஏற்க விவசாய சங்கங்கள் தயாராக இல்லை. வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவை உறுதியாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. அதேநேரத்தில் நாடுமுழுவதும் போராட்டத்தை விரிவுபடுத்தவும் விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்தச் சூழலில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

விவசாயிகள் அந்த நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துவிட்டால் அவர்களை அங்கிருந்து அகற்றுவது சிரமமான காரியம் என்றும், சிங்குஎல்லையைப்போல அந்த இடமும் மற்றொரு போராட்டக் களமாக மாறிவிடும் என்றும் உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.

இதைத்தொடர்ந்து, டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை எல்லையில் நேற்று 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். கான்கிரீட் தடுப்புகளை கொண்டு சாலைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், அறிவித்தபடி ராஜஸ்தானின் ஷாஜஹான்பூரில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று காலை டெல்லியை நோக்கி டிராக்டரில் புறப்பட்டனர். இதேபோல ஹரியாணாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்தனர்.

ஆனால், அவர்களை டெல்லி - ஹரியாணா எல்லையான ரிவாரி பகுதியிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர், மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் ஆலோசனை

இதனிடையே, விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தக துறை இணையமைச்சர் சோம் பர்காஷ் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின்போது, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை, பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் வந்தால் அவர்களிடம் அளிக்க வேண்டிய வாக்குறுதிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, விவசாயிகளின் போராட்டத்தில் சில மாவோயிஸ்ட் அமைப்புகளும், தேசவிரோத சக்திகளும் ஊடுருவி இருப்பதாக உளவு அமைப்புகள் அளித்த தகவல்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. கரோனா பரவல் இருக்கும்சூழலில் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் மீண்டும் வைரஸ் அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது தொடர்பாகவும் மத்திய அமைச்சர்கள் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

கேஜ்ரிவால் உண்ணாவிரதம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

மத்திய அரசு தனது விடாப்பிடியான போக்கை கைவிட்டு, விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். புதிய வேளாண்சட்டங்களை ரத்து செய்வதுடன் நின்றுவிடாமல், குறைந்தபட்ச ஆதரவு விலைநடைமுறையை உறுதி செய்யும் புதிய மசோதா ஒன்றையும் கொண்டுவர வேண்டும். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக நாளை (இன்று) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். ஆம் ஆத்மி தொண்டர்கள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு ஆதரவான மனநிலை கொண்டவர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

36 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்