விவசாயிகளுக்கு ஆதரவு: 35 விருதுகளைத் திருப்பித் தர குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் சென்ற தடகள வீரர்கள் தடுத்து நிறுத்தம்

By பிடிஐ

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக, தடகள வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்கள், விருதுகளைத் திருப்பி அளிக்க குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிச் சென்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 12-வது நாளாகத் தொடர்கிறது. விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமுகமான தீர்வும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தனது பத்மவிபூஷண் விருதைத் திருப்பி அளித்தார். இந்நிலையில், பஞ்சாப், ஹரியாணாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பலர் தாங்கள் பெற்ற பதக்கங்கள், விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி அளிக்கப் போகிறோம் எனத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 35க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து விருதுகளை திருப்பி அளிக்கச் சென்றனர்.

கடந்த 1982-ம் ஆண்டு அர்ஜூனா விருது பெற்ற கர்தார், 1987-ல் பத்மஸ்ரீ விருது வென்றவரும், ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தங்கம் வென்றவருமான குர்மெயின் சிங், மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் ராஜ்பிர் கவுர் உள்ளிட்ட பலர் சென்றனர். குர்மெயின் சிங் 2014-ல் தயான்சந்த் விருதையும், ராஜ்பிர் கவுர் 1984-ல் அர்ஜூனா விருதையும் பெற்றவர்கள்.

ஆனால், இந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லும் வழியிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

கர்தார் சிங்

1978, 1986-ல் ஆசிய விளையாட்டில் ஹாக்கியில் தங்கம் வென்ற கர்தார் சிங் கூறியதாவது

''விவசாயிகள் எங்களை எப்போதும் ஆதரித்துள்ளார்கள். இன்று எங்களுடைய விவசாயச் சகோதர்கள் மீது லத்தியடி பிரயோகம் நடத்தப்படுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. கடும் பனியில் தங்கள் உரிமைகளுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நான் ஒரு விவசாயியின் மகன். இன்று போலீஸில் ஐஜியானாலும் நான் விவசாயம் செய்து வருகிறேன். இந்தக் கொடூரமான சட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் என்று அரசிடம் வேண்டுகோள் வைக்கிறேன். கரோனா வைரஸ் குறித்து ஒட்டுமொத்த தேசமே பீதியில் இருந்தபோது, இரு அவைகளிலும் இந்தச் சட்டம் அவசரமாக நிறைவேற்றக் காரணம் என்ன, ஏன் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்?

வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என்பதை ஏற்கிறேன். ஆனால், எங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இல்லையே. எங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாகவும், விவசாயிகள் நலனையும் காப்பாற்ற வேண்டியது அரசின் முன்னுரிமைதானே. எதற்காக இந்தச் சட்டங்களை ஏற்கும்படி விவசாயிகளை அரசு கட்டாயப்படுத்துகிறது?''

இவ்வாறு கர்தார் சிங் தெரிவித்தார்.

இதுநாள்வரை இந்திய ஒலிம்பிக் அமைப்பு எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், இன்று முதல் முறையாக அறிக்கை வெளியிட்டது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்திர பத்ரா, பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்கள், விருதுகளைத் திருப்பி அளித்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறார்கள். நாங்கள் கூறுவது தேசிய விருதுகளும், விவசாயிகளின் போராட்டமும் தனித்தனியானது” எனத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

16 mins ago

வாழ்வியல்

25 mins ago

ஓடிடி களம்

35 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்