அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் கரோனா தடுப்பூசியை பெற பிரிட்டன் செல்ல விரும்பும் இந்தியர்கள்

By செய்திப்பிரிவு

‘‘பிரிட்டனில் அடுத்த வாரம் முதல் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா தடுப்பூசியைப் பெறுவதற்காக உடனடியாக அந்த நாட்டுக்கு செல்ல இந்தியர்கள் பலர் விரும்புகின்றனர்’’ என்று பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் பிரிட்டன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பைசர், ஜெர்மனியை சேர்ந்த பயோ என்டெக் மருந்து நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை அவசர கால அடிப்படையில் பயன்படுத்த பிரிட்டன் அரசு நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. மேலும், அடுத்த வாரம் முதல் பிரிட்டன் மக்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது.

மேலும், பிரிட்டன் வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் டிசம்பர் 15-ம் தேதி முதல் தங்களை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆறாவது நாள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பிரிட்டன் சென்றால் கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்தியர் பலர் உடனடியாக அங்கு செல்ல விரும்புகின்றனர் என்று பயண ஏற்பாட்டாளர்கள் (டிராவல் ஏஜென்ட்ஸ்) தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் கூறும்போது, ‘‘பிரிட்டன் சென்றால் எங்களுக்கு எப்படி, எப்போது கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று பலர் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தியர்களுக்கு உடனடியாக கரோனா தடுப்பூசி கிடைக்குமா என்று இப்போதைக்கு தெரியாது என்றுதான் அவர்களுக்கு பதில் சொல்கிறோம். அதேநேரத்தில் முதியவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குதான் முதலில் கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது’’ என்றார்.

‘ஈசிமைடிரிப்.காம்’ துணை நிறுவனர் மற்றும சிஇஓ நிஷாந்த் பிட்டி கூறும்போது, ‘‘ஏற்கெனவே லண்டன் செல்ல விசா பெற்றுள்ளவர்கள், உடனடியாக அங்கு செல்ல வசதி உள்ளவர்கள் பலர் கேள்விகள் கேள்வி கேட்டு வருகின்றனர்’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘தடுப்பூசி போட்டுக் கொள்ள பிரிட்டன் வரும் மக்களுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயமா? இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு அங்கு தடுப்பூசி கிடைக்குமா போன்ற கேள்விகளுக்கு பிரிட்டன் அரசிடம் இருந்து தெளிவான அறிவிப்பு வெளிவருவதற்காக எங்கள் நிறுவனம் காத்திருக்கிறது’’ என்றார்.

எனினும், லண்டன் செல்ல விரும்புபவர்களுக்கு 3 இரவுகள் தங்கும் வசதியுடன் பயண திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று நிஷாந்த் பிட்டி கூறினார். இதற்காக விமான நிறுவனங்கள், லண்டனில் உள்ள ஓட்டல்கள், மருத்துவமனைகளுடன் இந்நிறுவனம் பேசி வருகிறது.

இதேபோல் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் இருந்தும் பலர் லண்டன் சென்றால் தடுப்பூசி கிடைக்குமா என்று டிராவல் ஏஜென்டுகளை கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய டிராவல் ஏஜென்ட்ஸ் சங்க தலைவர் ஜோதி மயால் கூறும்போது, ‘‘கரோனா தடுப்பூசி எப்படிப்பட்டதாக இருக்கும் என்று அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று பிரிட்டன் அரசு கூறினாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்னர் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்