மண்டல பூஜை, மகரவிளக்கு வழிபாடு: சபரிமலை கோயில் நடை திறப்பு; கரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

By செய்திப்பிரிவு

மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. கரோனா வைரஸ் பரவல் காலத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கான அனைத்துப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் கேரள அரசு செய்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், முதல் முறையாக பக்தர்கள் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டனர். 5 நாட்கள் நடை திறக்கப்பட்ட நிலையில் நாள்தோறும் 250 பக்தர்கள் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சபரிமலையில் மண்டல பூஜைக்காக இன்று (15-ம் தேதி) மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி சிறப்பு பூஜை செய்தபின் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் வழிபாட்டிற்காக நாளை முதல் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கேரளாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைக் கேரள அரசும், தேவஸம்போர்டும் எடுத்துள்ளன. பக்தர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:

* பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தபின்புதான் மலைக்கு வர வேண்டும். இதன் மூலம் அதிகமான கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்.

* சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொருவரும் மலை ஏற்றத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழைக் கண்டிப்பாக உடன் எடுத்துவர வேண்டும்.

* பம்பா, நிலக்கல் பகுதியில் கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

* முகாமில் பக்தர்கள் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்குக் கரோனா அறிகுறிகள் இல்லை என உறுதி செய்தபின் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

* சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களின் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* திருவனந்தபுரம், திருவல்லா, செங்கனூர், கோட்டயம் ரயில் நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஐயப்ப பக்தர்கள் இந்த முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

* சபரிமலை கோயிலில் தரிசனம் செய்யும்போது பக்தர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* 60 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் தாங்கள் உடல்நலத்துடன் இருக்கிறோம் என்பதற்கான சான்றிதழைக் கொண்டுவர வேண்டும்.

* வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு திடீரென கரோனா இருப்பது தெரியவந்தால், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நெகட்டிவ் வரும்வரை சிகிச்சை அளிக்கப்படும்.

* பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தனியார் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும்.

* பத்தனம்திட்டா, கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளைக் கையாள்வதற்கு தனியாக ஆம்புலன்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளிலும் ஆம்புலன்ஸ் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

* மலையில் ஏறும்போது பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. உடல்ரீதியான அதிகமான பணிகளுக்கு ஆட்படும்போது அதற்கேற்ப விதிமுறைகள் தளர்த்தப்படும்.

* பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை அதற்குரிய குப்பைத் தொட்டியில் பக்தர்கள் போட வேண்டும். இதற்காக போதுமான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் டிசம்பர் 26-ம் தேதி வரையும், மகரவிளக்குத் திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 14-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. 2 மாதங்கள் நீடிக்கும் இந்த சீசன் காலத்தில், கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

59 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்