வக்ஃபு வாரியம் கலைக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

வக்ஃபு வாரியம் கலைக்கப்பட்டது சட்டவிரோதம் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசுதாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வக்ஃபு வாரியச் சட்டம் 1995-படி,தமிழக வக்ஃபு வாரியத்தில் 2 எம்பி.க்கள், 2 எம்எல்ஏக்கள், 2 பார்கவுன்சில் உறுப்பினர்கள், 2 முத்தவல்லிகள் என 8 பேர் தேர்தல் மூலமாகவும், 4 பேர் அரசின் நியமனம் மூலமாகவும் மொத்தம் 12 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், வக்ஃபு வாரிய விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடாது எனக் கூறி, வாரியத்தை கலைத்து தமிழக அரசு கடந்த 2019 செப்.18-ல் உத்தரவிட்டது. மேலும், தமிழக நிதித்துறை செலவின செயலரான சித்திக்கை வக்ஃபு வாரியத்தின் சிறப்பு அதிகாரியாகவும் நியமித்து உத்தரவிட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பசலூர் ரஹ்மான் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முத்தவல்லிகள் பிரிவில் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.செய்யது அலி அக்பர் மற்றும் ஹாஜா கே.மஜீத் ஆகியோர் இடையீட்டு மனுதாரர்களாக சேர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஆக.17-ல் அளித்ததீர்ப்பில், ‘‘வக்ஃபு வாரியத்தில் முத்தவல்லிகள் பிரிவில் முறைப்படி தேர்தல் மூலமாக கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எஸ்.செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அவர்களின் சட்டப்படியான உரிமை நிலைநாட்டப்படுகிறது. அவர்கள் பதவியில் இருக்கும்போதே வக்ஃபு வாரியத்தை கலைத்து தமிழக அரசுஉத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம்.வக்ஃபு வாரியத்தை கலைத்து தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவு பகுதியாகரத்து செய்யப்படுகிறது. அவர்கள்இருவரையும் தவிர்த்து மற்ற உறுப்பினர்களின் பதவியை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்’’ என தெரிவித்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி அசோக் பூஷன், ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் நடந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனும், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரத்னாகர் தாஸ், வழக்கறிஞர் மஹ்மூத் ப்ராச்சா ஆகியோரும் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை உறுதி செய்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்