சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு இனி காஷ்மீரில் யாரும் நிலம் வாங்கலாம்: அறிவிக்கை வெளியிட்டது மத்திய அரசு

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் நாட்டின் எந்தவொரு குடிமகனும் நிலம் வாங்குவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. அப்போது ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கான புதிய நிலச் சட்டங்களுக்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஜம்மு காஷ்மீரில் 26 சட்டங்களை மத்திய அரசு மாற்றி அமைத்து அல்லது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு, ‘ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச மறுசீரமைப்பு (மத்திய சட்டங்களை ஏற்றுக் கொள்ளுதல்) மூன்றாம் உத்தரவு - 2020’ என அழைக்கப்படும் என உள்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி ஜம்மு காஷ்மீரில் வெளியாட்கள் நிலம் வாங்குவதற்கு 370-வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்த முன் நிபந்தனை இதில் நீக்கப்பட்டுள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிலம் வாங்குவதற்கு, ‘அப்பிராந்தியத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்’ என்ற முன் நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டின் எந்தவொரு குடிமகனும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் இனி நிலம் வாங்க முடியும். இந்தப் புதிய சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக இம்மாதத்தில், மத்திய அரசின் 11 சட்டங்கள் ஜம்மு காஷ்மீரில் உடனடியாக அமலுக்கு வருவதாக 2 உத்தரவுகளை உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது. கடந்த 1970-ம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டம், 1948-ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டம், 1947-ம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டம், 1961-ம் ஆண்டு மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் சட்டம், 1926 தொழிற்சங்க சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் ஜம்மு காஷ்மீரில் அமலுக்கு வந்தன.

ஒமர் அப்துல்லா எதிர்ப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேற்றைய அறிவிக்கை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா கூறும்போது, “ஜம்மு காஷ்மீர் நில உரிமைச் சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை ஏற்க முடியாது. ஜம்மு காஷ்மீர் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. குறைந்த அளவில் நிலம் வைத்துள்ள ஏழைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்