கலாச்சார ஆய்வுக்குழுவைக் கலைத்திடுக: குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பி.க்கள் கடிதம்

By செய்திப்பிரிவு

கலாச்சார ஆய்வுக்குழுவைக் கலைத்திட வேண்டும் என வலியுறுத்தி 32 எம்.பி.க்கள் கூட்டாகக் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனர்.

நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழு அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரம்:

“குடியரசுத் தலைவருக்கு, வணக்கம்,

பொருள்: இந்திய கலாச்சார வரலாறு ஆய்வுக் குழு குறித்து,

நாங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு முக்கியமான பொருளை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து உங்களின் உடனடித் தலையீட்டையும் நாடுகிறோம்.

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14 அன்று எழுத்துருவில் அளித்த பதிலில் இந்தியாவின் கலாச்சாரத் தோற்றுவாய் பற்றியும், அதன் பரிணாமம் குறித்தும் 12,000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வுக்குட்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நமது நாடு பன்மைத்துவக் கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட பெருமைமிக்க மரபு வழியைக் கொண்டதாகும். ஆகவே, அதன் ஆய்வுக்கு இம்மாபெரும் நாட்டின் பன்முகக் கலாச்சாரங்கள் குறித்த ஆழமான உட்பொருள்கள் இயல்பாகவே தேவைப்படுகின்றன.

நாங்கள் உங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வர விழைவது என்னவெனில், இத்தகைய பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் அந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழு இல்லை. தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தலித்துகள் இல்லை. பெண்கள் இல்லை. அநேகமாக அக்குழுவின் எல்லா உறுப்பினர்களுமே இந்தியச் சமூகத்தின் சாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற ஒரு சில சமூகக் குழுக்களைச் சார்ந்தவர்களே.

தென்னிந்திய மொழிகளின், பெருமைமிக்க வரலாற்றையும் மத்திய அரசாலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட ஆய்வாளர்கள் யாரும் அக்குழுவில் இல்லை. அக்குழுவின் உள்ளடக்கம் பல கேள்விகளை எழுப்புகிறது. விந்திய மலைக்குக் கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா?

சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா? பாலினப் பார்வையற்ற, தனித்துவமிக்க பன் தேசிய இனங்கள், பல்வேறு சமூகக் குழுக்களைப் புறம் தள்ளியுள்ள இக்குழுவின் உள்ளடக்கம், குழு அமைக்கப்பட்டுள்ள நோக்கம் குறித்த ஐயங்களையே எழுப்புகிறது.

மிகச் சிறந்த ஆய்வாளர்களான ஜான் மார்ஷல், சுனித் குமார் சாட்டர்ஜி, ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர். பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இத்துறைக்குப் பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர். இந்த நேர்மறையான பங்களிப்புகளையெல்லாம் இக்குழு சிதைத்துவிடுமோ என அஞ்சுகிறோம்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள குழு அறிவியல் பார்வையோடு ஆய்வு செய்ய இயலாது. மேலும், வரலாற்றுத் திரிபுகளுக்கு வழிவகுத்துவிடும் எனக் கருதுகிறோம். இப்பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு, அரசு அமைத்துள்ள இக்குழுவைக் கலைக்க அறிவுறுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்