உலக அளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரிப்பு: வெங்கய்ய நாயுடு கவலை

By செய்திப்பிரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிக்கை படி 2014-ம் ஆண்டில் இருந்து உலக அளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

`தேவையை சமாளிக்கும் வகையிலான உணவு, சத்துகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கான அறிவியல்' என்ற தலைப்பில் இன்று எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளையில் நடந்த மெய்நிகர் கலந்தாடலை தொடங்கி வைத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் (எஸ்.டி.ஜி.) என்ற தொலைநோக்கு பார்வையுடன் கூடிய வரையறைகளை 2015 ஆம் ஆண்டில் உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.

யாரும் பின்தங்கிவிட்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உலக நாடுகள் உறுதியேற்றுக் கொண்டன.

2030 ஆண்டுக்கு இன்னும் 10 ஆண்டுகள் உள்ளன. இந்த முயற்சியில் என்ன முன்னேற்றத்தை எட்டியிருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய வேண்டிய காலம் இது. `பட்டினியே இல்லாத' மற்றும் `நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்க்கை' என்ற இலக்குகளை அடைவதில் நாம் இப்போது எந்த இடத்தில் இருக்கிறோம்?

`உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சத்தான உணவின் நிலை - 2020' என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம் ஆண்டில் இருந்து உலக அளவில் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் உலக அளவில் உலக மக்கள் தொகையில் 9.7 சதவீதம் அல்லது 750 மில்லியன் பேருக்கு உணவுப் பாதுகாப்பு இல்லை என்றும் அறிக்கை கூறுகிறது.

மேலும் 2019-ல் உலக மக்களில் 690 மில்லியன் பேருக்கு போதிய சத்துகள் உள்ள உணவு கிடைக்கவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அதேபோல உலக அளவில் 2019 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் 6.9 சதவீதம் அல்லது 47 மில்லியன் பேருக்கு உடல் மெலிவு பாதிப்பு இருந்தது. மேலும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் 10-ல் 9 பேர் ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவில் வாழ்வதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நிச்சயமாக இது நல்லவிதமான தகவல் கிடையாது.வெளிப்படையாகச் சொன்னால், நாம் சரியான பாதையில் செல்லவில்லை. நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.வித்தியாசமாகவும், இன்னும் விரைவாகவும் நாம் செயலாற்ற வேண்டியுள்ளது.

தேசிய, பிராந்திய மற்றும் உலக அளவில் அவசர, ஒருமித்த கவனத்துடன் கூடிய, உறுதியான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பட்டினியைக் குறைப்பது, சத்துக்குறைபாட்டைக் குறைப்பது, சிசு மரணத்தையும், குழந்தைகளிடம் மன வளர்ச்சியின்மை பாதிப்பையும், உடல் மெலிதலையும் குறைப்பதில் சமீப ஆண்டுகளாக இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

நாட்டில் சுகாதாரம் மற்றும் சத்துகள் மிகுந்த உணவுகள் பிரச்சினைகளுக்கு இந்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது. பிரதமரின் வந்தனா திட்டம் (PMMVY) உள்ளிட்ட திட்டங்கள் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் 98.16 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.

போஷன் அபியான் திட்டம், ஆதார் அட்டையுடன் இணைந்த பயனாளிகள் கண்காணிப்புத் திட்டம், முன்கள அலுவலர்களுக்கு செயல்பாட்டு அடிப்படையில் கூட்டு ஊக்கத் தொகை அளித்தல் ஆகியவை அரசின் முயற்சிகளில் அடங்கும். வயிற்றுப் போக்கை தடுக்க நாடு முழுக்க ரோட்டா வைரஸ் தடுப்பூசி போடுவது மற்றொரு முன்முயற்சியாக உள்ளது. பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு காலையில் சத்துமிகுந்த உணவு அளிப்பதற்கு, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கல்விக் கொள்கை வகை செய்கிறது.

ஆனாலும் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.குறிப்பாக நோய்த் தொற்று சூழ்நிலையில், பட்டினியும், சத்துக் குறைபாடும் பெரும் பிரச்சினைகளாக உருவெடுக்கும். வாழ்வாதாரங்கள் பறிபோனதாலும், பொருளாதார தேக்கத்தாலும் இந்த நிலை ஏற்படலாம்.

மோதல்கள் காரணமாகவும், பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களாலும், இயற்கை வளங்களை அழித்ததாலும், தண்ணீர் பற்றாக்குறையாலும் தான் சமீப காலத்தில் உணவுப் பாதுகாப்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அமைதியான சில இடங்களில் கூட, பொருளாதாரத் தேக்கம் காரணமாக ஏழைகளுக்கு உணவு கிடைக்காமல் போய், உணவுப் பாதுகாப்பு நிலைமை மோசம் அடைந்துள்ளது.

பாதிப்புகளைத் தாங்கும் துறைகளில் முதலீடு செய்தல், இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான முதலீடு செய்வதில் முன் எப்போதையும்விட இப்போது அவசர அணுகுமுறை தேவைப்படுகிறது.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

க்ரைம்

15 mins ago

விளையாட்டு

44 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்