குடியுரிமை திருத்தச் சட்டத்தின் தாக்கம்: இந்தியப் பிரஜையாக வேண்டி கிறித்துவ மதம் மாறும் டெல்லி முஸ்லிம் அகதிகள்

By ஆர்.ஷபிமுன்னா

குடியுரிமை திருத்தச் சட்டத்தின்(சிஏஏ) தாக்கமாக, டெல்லியில் வாழும் முஸ்லிம் அகதிகள் கிறித்துவ மதத்திற்கு மாறத் துவங்கி உள்ளனர். இந்திய பிரஜையாகும் பொருட்டு மதம் மாறுவோர் பட்டியலில் ரோஹிங்கியா மற்றும் ஆப்கானிய முஸ்லிம்கள் இடம் பெற்றுள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் கடந்த வருடம் டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது. இதன்படி, டிசம்பர் 31 2014 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்த அகதிகளுக்கு இந்திய பிரஜையாகும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்து, கிறித்துவம், புத்தம் மற்றும் ஜைன மதத்தினருக்கும் கிடைக்கும் இந்த வாய்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டும் கிடைக்காது. இதனால், இந்தியாவில் உள்ள முஸ்லிம் அகதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

இந்நிலையில் அதில் இருந்து தப்ப வேண்டி டெல்லியில் உள்ள முஸ்லிம் அகதிகளில் பலரும் கிறித்துவ மதத்திற்கு மாறத் துவங்கி உள்ளனர். இவர்களில் ஆப்கன், வங்கதேசம் மற்றும் பர்மா நாடுகளின் அகதிகள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இவர்கள் டெல்லியில் உள்ள ஆப்கனிய கிறித்தவ தேவாலயங்களின் பிரார்த்தனை கூட்டங்களுக்கும் சென்று வருவதாகத் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை டெல்லியின் ஆப்கன் தேவாலாய நிர்வாகிகள் உறுதிப்படுத்த மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டெல்லி முகாம்களின் அகதிகள் வட்டாரம் கூறும்போது, ‘இதுபோல், மதம் மாறினால் சிஏஏவில் இருந்து தப்பி இந்தியப் பிரஜையாகும் வாய்ப்பு உள்ளது என்பதால் சிலர் மதம் மாறி வருகின்றனர்.

இதுபோல், மதமாறியவர்களுக்கு சிஏஏவின்படி இந்திய குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. இதில் சிக்கல் ஏற்பட்டால், நீதிமன்ற வழக்குகள் மூலம் பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அங்கும் கிடைக்கவில்லை எனில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் கிறித்துவ ஆதரவு பெற்ற நாடுகளில் அடைக்கலம் பெறவும் திட்டமிடுகின்றனர்.’ எனத் தெரிவித்தார்.

இதுபோல் மதம் மாறுபவர்கள் அதற்காக கிறித்தவப் பெண்களை மணம்புரியும் உத்திகளை கையாள்வதும் நிகழ்கிறது. மணமாகி குழந்தைகளுடன் இருப்பவர்களும் கூட இரண்டாவதாகவும் மணமுடிக்கத் தயாராகின்றனர்.

இந்தவகையில் சுமார் 30 குடும்பங்கள் மதம் மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள், தம் விசா விண்ணப்பங்களையும் ரத்து செய்து, புதிதாக விண்ணப்பிக்கத் துவங்கி உள்ளதாகவும் தெரிகிறது.

மியான்மர் அகதிகளுக்கு சிஏஏயின்படி இந்திய பிரஜையாக முடியாது. எனவே, ரோஹிங்கியா முஸ்லிம்கள், மியான்மரை மறைத்து தாம் வங்கதேசத்தில் இருந்து வந்ததாகக் கூறி இந்திய பிரஜைக்கு முயல்வதாகவும் கூறப்படுகிறது.

மத்திய உளவுத்துறை மூலம் இந்த தகவல்கள் மத்திய அரசிற்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் தலையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்