டெல்லி நிஜாமுதீன் மவுலானா சாத் எங்கே? போலீஸார் தீவிரத் தேடுதல்; தனிப்படை அமைப்பு

By ஐஏஎன்எஸ்

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத் கந்த்லாவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடு தப்லீக் ஜமாத் சார்பில் நடந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர்.

இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது.

கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். அவர்கள் அனைவரையும் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தி நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்த்லாவி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், வழக்குப்பதிவு செய்தபின் தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா சாத் கந்த்லாவியைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்காக டெல்லி குற்றவியல் பிரிவு சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு மவுலானாவின் சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசம் முசாபர்நகர், ஷாம்லி மாவட்டங்களில் உ.பி. போலீஸார் உதவியுடன் தேடுதல் நடத்தினர். மேலும் டெல்லியில் ஜாகிர் நகர், நிஜாமுதீன் ஆகிய இடங்களில் 3 வீடுகளில் தேடுதல் நடத்தியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மவுலானா சாத் கந்த்லாவிக்கும் கரோனா தொற்று இருக்கலாம் என்பதால் அவர் தனக்குத் தானே மறைவான இடத்தில் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் 200 நாடுகளைச் சேர்ந்த 100 கோடி முஸ்லிம் ஆதரவாளர்கள் தனக்கு இருப்பதாக மவுலானா சாத் கந்த்லாவி கூறிவருகிறார். ஜமாத்தின் மத்திய கவுன்சில் (சுரா) அனைத்து உத்தரவுகளையும் புறந்தள்ளி கடந்த 2015-ம் ஆண்டு முதல் மர்காஸ் நிஜாமுதீனின் தலைவராக செயல்படுவதாக ஷாம்லியின் மவுலானா இத்ரிஸ் குற்றம்சாட்டுகின்றனர்.

அவர்கள் கூறுகையில், “ மவுலானா சாத் கந்த்லாவி மூத்தோர்களையும், பண்டிதர்களையும், சுராவின் உறுப்பினர்களையும் அவமதித்துவிட்டார். அமீராக தேர்வு செய்யப்படுபவர் சுராவின் பரிந்துரையில்தான் இருக்க வேண்டும். ஆனால் மவுலானா சாத் சுராவின் எந்த உத்தரவையும் மதிக்கவில்லை, சுயமாக முடிவு செய்து ஜமாத்தைக் கைப்பற்றினார்” எனக் குற்றம் சாட்டுகின்றனர்

டெல்லி நிஜாமுதான் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்த்லாவி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தின் மேற்கு மாவட்டமான ஷாம்லியில் கந்தலா எனும் பகுதியைச் சேர்ந்தவர் மவுலானா சாத். இந்தப் பகுதி டெல்லியிலிருந்து 80 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

மவுலானா சாத்தின் கொள்ளுத்தாத்தா மவுலானா முகமது இலியாஸ் கந்த்லாவியால் தப்லீக் ஜமாத் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்