சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குபவர்களை கவுரவிக்கும் பிசினஸ்லைன்: ‘சேஞ்ச் மேக்கர்ஸ் 2020’ விருது வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு

By செய்திப்பிரிவு

சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குபவர்களை கவுரவிக்கும் வகையில் ‘பிசினஸ்லைன்’, சேஞ்ச் மேக்கர்ஸ் விருது வழங்கி வருவதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்து குழுமத்தின் ‘பிசினஸ்லைன்’ நாளேடு சார்பில், டெல்லியின் தாஜ் மான்சிங் நட்சத்திர ஓட்டலில் ‘சேஞ்ச் மேக்கர்ஸ் 2020’ விருது வழங்கும் விழா 3-வது ஆண்டாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மொத்தம் 6 பிரிவுகளில் இரண்டு அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட 8 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நாட்டின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டூடி சந்த், மத்திய அரசின் விண்வெளி ஆய்வகமான இஸ்ரோ,பெண்களுக்காக மலிவு விலைநாப்கின் கண்டுபிடித்த தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலம் ஆகியோருக்கு சேஞ்ச் மேக்கர் விருதுகள் வழங்கப்பட்டன.

மனிதக்கழிவுகளை அகற்ற குறைந்த செலவில் இயந்திரம் கண்டுபிடித்த ‘ஜென்ரோபடிக் இன்னோவேஷன்’ என்ற நிறுவனத்தின் கேரள இளைஞர்கள், திறந்தவெளி கழிவறை பழக்கத்தை சத்தீஸ்கரின் கிராமத்தில் ஒழித்த பிரதோப்மேவாடா, மாற்றுத் திறனாளி களுக்கான சமூக சேவகர் சாந்தி ராகவன் ஆகியோருடன் ஸ்பிரிட், ஜெம் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை வழங்கிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

மாற்றம் என்பது நிலையானது. இது சர்வதேச அளவில் அனைத்து பகுதிகளிலும் நிகழ்கிறது.

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுகள், ஒடுக்கப்பட் டோர் மற்றும் ஏழைகள் வரை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். தற்போது உலகம் முழுவதிலும் கரோனா வைரஸ் பரவிவருகிறது. இதற்கு உணவு முறையும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளைவிட நமது உணவுமுறை மிகவும் உயர்ந்ததாகும். எனவே, நம் நாட்டு இளைஞர்கள் மேற்கத்திய நாடுகளின் உணவுமுறைகளின் வலையில் ஏன் விழ வேண்டும்? உங்களுக்கு வயது 25 கூட ஆகாத நிலையில் சிக்கன் 65, சிக்கன் மஞ்சூரியன் சாப்பிட விரும்புவது ஏன்? பெரும்பாலானவர்கள் உடனடிஉணவை அதிகம் விரும்புகின்றனர். உடனடி என்பது நிரந்தர நோய்களை உருவாக்கக் கூடியது. எனவே, உணவை நன்றாக சமைத்து உன்பதே சரியானது.

ஒவ்வொருவரும் நம் நாட்டின் நன்மைக்காக பாடுபட வேண்டும். நம் நாடு ஒரு காலத்தில் உலகின் குருவாக முக்கிய இடம் வகித்திருந்தது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) காலனிஆதிக்கத்தினால் இழக்க வேண்டியதாகியது. அவர்கள் வந்தார்கள், ஆட்சி செய்தார்கள், சூறையாடி னார்கள், நம்மை மோசம் செய்தார்கள் என்பது நம் அறிவையும் பாதித்துள்ளது. முன்பிருந்தது போலான நம் அறிவை மீட்டெடுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நம் நாட்டை வளப்படுத்துவதும் அவசியம்.

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் ஆலோசனைகளை முழுவதுமாக ஏற்றிருந்தால், பொருளாதார நிலையில் நம் நாடு உலகின் 3-வது இடத்தை வகித்திருக்கும். பிசினஸ்லைன் நாளேடு, மாற்றத்தை உருவாக்குபவர்களை அடையாளம் கண்டு கவுரவித்து வருகிறது. ஏற்கெனவே இந்தியாவின் மிகச்சிறந்த அறிவு ஜீவிகள், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதில், ஒருவர் அல்லது அதற்கும் மேற்பட்டோர் எதிர்காலத்தில் பிசினஸ்லைன் விருது பெற்று சமூக மாற்றம் செய்பவர்களாகும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு, ‘தி இந்து’ நாளேட்டின் வெளியீட்டாளர் என்.ரவிமற்றும் அக்குழுமத்தின் இயக்குநர் வேணுகோபால் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கினர். இதையடுத்து, மத்திய வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிசினஸ்லைன் ஆசிரியர் ராகவன் ஸ்ரீனிவாசன் இடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கேஎஸ்எல் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் ரங்கராஜன் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். இறுதியில் ‘தி இந்து’ குழுமத்தின் தலைமை வர்த்தக அதிகாரி சுரேஷ் பாலகிருஷ்ணா நன்றி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

இந்தியா

31 mins ago

ஆன்மிகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்