நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு; மதரீதியாகப் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமித் ஷா உறுதி

By பிடிஐ

நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) செயல்படுத்தப்படும். மதத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்படமாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் உறுதியாகத் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது என்ஆர்சி தொடர்பாக எழுந்த துணைக் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் இந்துக்கள், பவுத்தர்கள், ஜெயின் மதத்தினர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி மக்கள் அனைவரையும் அகதிகளாக மத்திய அரசு ஏற்கும். அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கப்படும்.

தேசிய குடியுரிமை பதிவேடு முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். யாரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அனைவரையும் தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டு வருவது சாதாரண செயல்முறைதான்.

மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் என்ஆர்சி பதிவேட்டில் இடம் பெறமாட்டார்கள் என்ற எந்த விதிமுறையும் இதில் இல்லை. இந்திய குடிமக்களாக இருக்கும் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெறுவார்கள். மதரீதியாகப் பாகுபாடு காட்டப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. என்ஆர்சி என்பது வேறு, குடியுரிமை திருத்த மசோதா என்பது வேறு.

அசாம் மாநிலத்தில் என்ஆர்சி செயல்படுத்தப்பட்டது. அதில் வரைவுப் பட்டியலில் தங்கள் பெயர்கள் விடுபட்ட மக்கள், தீர்ப்பாயத்துக்குச் சென்று முறையிட உரிமை இருக்கிறது.

அசாம் மாநிலம் முழுவதும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீர்ப்பாயத்தை அணுகுவதற்கு யாருக்கேனும் பணப்பிரச்சினை இருந்தால், அதற்குரிய செலவை அசாம் அரசு ஏற்று வழக்கறிஞரை ஏற்பாடு செய்யும்.

மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மதத்தினரும் என்ஆர்சி பட்டியலில் இடம் பெறுவார்கள். இந்துக்கள், பவுத்தர்கள், ஜெயின், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்ஸிகள் அனைவரும் குடியுரிமை பெறுவார்கள். அதற்காகத்தான் குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்படுகிறது

வங்கதேசம், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தல்களை அனுபவிக்கும் மக்கள் குடியுரிமை திருத்த மசோதாவின் கீழ் குடியுரிமை பெறுவார்கள். மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், தேர்வுக்குழுவும் ஒப்புதல் அளித்த பின்னும் மசோதா காலாவதியானது. இப்போது மீண்டும் மசோதா வர உள்ளது. என்ஆர்சிக்கும் இந்த மசோதாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை’’.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

விளையாட்டு

7 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்