சிவசேனாவைக் கழற்றிவிடுகிறாரா? சரத் பவார் பேட்டியால் புதிய குழப்பம்

By ஐஏஎன்எஸ்

மகாராஷ்டிராவில் என்சிபி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்துவரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அளித்த பேட்டியால் சிவசேனாவைக் கழற்றிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், ஆட்சி அதிகாரத்தை சமபங்காகப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க பாஜக முன்வராததால், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க சிவசேனா ஆதரவு தரவில்லை.

இதையடுத்து, சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருகிறது.

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி விதித்த நிபந்தனையால், அந்தக் கட்சியின் சார்பில் மத்திய கனரகத் தொழில்கள் துறை அமைச்சராக இருந்த அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்தார். இதனால் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான விரிசல் அதிகமானது.

ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து அதன்படி நடக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சரத் பவார் சந்திக்க உள்ளார். அப்போது சிவசேனாவுடன் கூட்டணியை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பங்கேற்க சரத் பவார் வருகை தந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவரிடம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கப்போவதாகக் கூறி வருகிறது அது எவ்வாறு செல்கிறது என்று கேட்டனர். அதற்கு சரத் பவார் வியப்பு தெரிவிக்கும் வகையில், "அப்படியா, பேச்சு நடத்துகிறார்களா" எனக் கேட்டார்.

இது தொடர்பாக சரத் பவார் நிருபர்களிடம் பேசுகையில், " தேசியவாத காங்கிரஸ், காங்கிஸ், சிவசேனா இணைந்து ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்பது தெரியுமா? தெரிந்துதான் கேட்கிறீர்களா" எனக் கேட்டார்.

அதற்கு நிருபர்கள், என்சிபியுடன் சிவசேனா பேச்சு நடத்துவது உண்மையில்லையா என்று கேட்டனர், அதற்கு சரத் பவார், " சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள், என்சிபி-காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். அவர்கள் அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம்" என்று தெரிவித்தார்.

சரத் பவாரிடம் மீண்டும் நிருபர்கள், சிவசேனா-என்சிபியுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று கூறிவருகிறார்களே என்று கேட்டனர். அதற்கு சரத் பவார் மிகவும் கிண்டலாக, "அப்படியா" எனக் கேட்டவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

இந்நிலையில் சோனியா காந்தியை அவரின் வீட்டில் இன்று பிற்பகலில் சரத் பவார் சந்திக்கிறார். சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சோனியா காந்தியும் சரத் பவாரும் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பலகட்டங்களாக ஆலோசித்தாலும், சிவசேனாவின் கொள்கைகள், சித்தாந்தங்கள், தீவிர இந்துத்துவா சிந்தனை போன்றவற்றால் நெருங்கிச் செல்ல தயக்கம் காட்டுகின்றார்கள்.

மேலும் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்தாலும் அதை சிவசேனாவுடன் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள். மேலும், சிவசேனா தனது தீவிர இந்துத்துவா சிந்தனையைக் குறைத்துக் கொள்ள வேண்டும், மதச்சார்பற்ற நிலையை எடுக்க வேண்டும் என்றும் காங்கிஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், சிவசேனா அரசில், என்சிபிக்கும் சம பங்கு அளிக்கவும் காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது" எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், சிவசேனா, காங்கிரஸ், என்சிபி இடையே கூட்டணி அமையுமா, பாதியிலேயே சிவசேனாவை இரு கட்சிகளும் சேர்ந்து கழற்றிவிடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

32 mins ago

சுற்றுச்சூழல்

34 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

56 mins ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்