டெல்லி காற்று மாசு தமிழகம் வரை பரவுகிறதா? 5-வது நாளாக சென்னையில் காற்றின் தரம் மோசமானது

By க.போத்திராஜ்

டெல்லி மக்களைக் கலங்கடித்து வரும் காற்று மாசு தற்போது தமிழகத்தை நோக்கி நகர்ந்து, குறிப்பாக சென்னை வரை காற்றின் போக்கால் இழுத்து வரப்பட்டுள்ளது.

தீபாவளிக்குப் பின் டெல்லியில் காற்று மாசின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்யப்பட்டு மீதமிருக்கும் நெல், கோதுமை, பார்லி கதிர்களைத் தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் உருவான புகை டெல்லி வரை பரவ முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.

பஞ்சாப், ஹரியாணாவில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தில் உள்ள மீதமுள்ள கதிர்களை எரிப்பதால்தான் அந்தப் புகை தலைநகர் டெல்லி வரை பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.

அதிகரிக்கும் காற்று மாசு

அதுமட்டுமல்லாமல் டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, வாகனங்களின் பெருக்கம், கட்டிடங்களை இடித்தல், கட்டுமானப் பணிகள், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் புகையாலும் டெல்லியில் காற்று மாசு தீபாவளிக்குப் பின் அதிகரிக்க முக்கியக் காரணம்

குறிப்பாக வடமாநிலங்களில் பனிக்காலம் தொடங்கிவிட்டதால், பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. காற்றில் பரவியுள்ள புகை, சிறு கரிய துகள்கள் போன்றவை பனிமூட்டம் காரணமாக மேலே எழும்ப முடியாமல் இருப்பதால், கடந்த ஒரு வாரமாக காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது.

பொதுவாக காற்றின் தரம், காற்று தரக் குறியீட்டின் மூலம் அளவிடப்படுகிறது. காற்று தரக் குறியீடு, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் 'நல்லது', 51-100 புள்ளிகள் வரை இருந்தால் 'மனநிறைவு', 101-200 வரை புள்ளிகள் இருந்தால் 'மிதமானது', 201-300 புள்ளிகள் இருந்தால் 'மோசம்', 301-400 வரை இருந்தால் 'மிக மோசம்', 401-500 புள்ளிகள் இருந்தால் 'மிகத்தீவிரம்', 500 புள்ளிகளுக்கு மேல் சென்றால் மிகத்தீவிரம் அல்லது நெருக்கடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் பார்த்தால் டெல்லியில் காற்று மாசு, காற்றின் தரக் குறியீடு உச்சகட்டமாக 600 புள்ளிகளுக்கு மேல் கடந்த வாரத்தில் சென்று அபாயக் கட்டத்தை எட்டியது.

இதனால் சுகாதார அவசரநிலையை அறிவித்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம், டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து, கட்டுமானப் பணிகள் செய்யவும் தடை விதித்தது.

வழக்குப் பதிவு

மேலும், ஹரியாணா, பஞ்சாப்பில் வயல்களில் கதிர்களை எரித்த விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யவும் சுற்றுச்சூழல் அமைப்பு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும், டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து குறைந்தபாடில்லை. காற்று மாசைக் குறைக்கும் வகையில் டெல்லி அரசும் வாகனங்களின் இயக்கத்தைக் குறைக்கும் வகையில் ஒற்றைப் படை, இரட்டைப் படை வாகனங்களை இயக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

டெல்லியில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்தக் குழு காற்று மாசைக் குறைப்பதற்கான வழிகளை ஆய்வு செய்து கடந்த வாரம் அறிக்கை அளித்தது.

விவசாயிகளுக்கு நிதியுதவி

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோர் முன் கடந்த சில நாட்களாக விசாரணை நடைபெற்றது. அப்போது காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுக்காத மாநில அரசுகள் மீது நீதிபதிகள் காட்டமான விமர்சனங்களை வைத்தனர். அதுமட்டுமல்லாமல் ஹரியாணா, பஞ்சாப் விவசாயிகள் கதிர்களை எரிக்காமல் இருப்பதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

குறிப்பாக அடுத்த சீசன் முதல் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் வழங்கவும், கதிர்களை எரிப்பதைத் தடுக்க இலவசமாகக் கருவிகள் வழங்கவும் ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை 3 வாரங்களுக்குள் வகுத்து அறிக்கையாகத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

தமிழகம் வரை....

பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் வயல்வெளியில் வைக்கப்பட்ட நெருப்பின் புகை தற்போது காற்றின் இழுவை காரணமாக சென்னை வரை பரவியுள்ளது என்பதுதான் கவலைக்குரியதாக இருக்கிறது.

சென்னை மட்டுமல்லாது விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட கடற்கரைப் பகுதி நகரங்கள் முழுமையும் காற்று மாசின் தாக்கம் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த இரு நாட்களாக தலைநகர் டெல்லியைக் காட்டிலும் சென்னையில் காற்றின் தரம் குறைந்துள்ளது காற்று தரக் குறியீட்டில் தெரியவந்துள்ளது. வியாழக்கிழமை காலை 9.30 மணி நிலவரப்படி சென்னையில் காற்றில் மிதக்கும் நுண்துகள் (பிஎம் 2.5) 264 ஆக இருந்தது. குறிப்பாக வேளச்சேரி, மணலி, கொடுங்கையூர், அண்ணா நகரில் சராசரியாக 341 புள்ளிகளும், வேளச்சேரியில் 273 புள்ளிகளாக இருந்தது.

இன்றைய நிலவரம்

இன்று காலை 10 மணி நிலவரப்படி சென்னையில் ஆலந்தூரில் காற்றின் தரம் 288 புள்ளிகளாக இருந்தது. இது காற்றின் தரக் குறியீட்டில் மோசம் என்ற அளவில் இருக்கிறது. இந்த 288 புள்ளிகளில் இருக்கும்போது மக்கள் சுவசிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று குறிப்பிடத்தக்கது. டெல்லியில் இன்று காலை 9 மணி நிலரப்படி காற்றின் தரக் குறியீடு 350 புள்ளிகளாக இருந்தது.

அதேபோல, சென்னை மணலி பகுதியில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 328 புள்ளிகளாக இருக்கிறது. இது மிகவும் மோசம் என்ற குறியீட்டில் குறிக்கலாம். இந்த அளவில் காற்றின் மாசு இருக்கும்போது மக்களுக்கு சுவாசக் கோளாறு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். வேளச்சேரியில் காலை 10 மணி நிலவரப்படி 292 புள்ளிகளாக மோசம் என்ற அளவில் இருந்தது.

என்ன சொல்கிறார் பிரதீப் ஜான்?

ஃபேஸ்புக்கில் எழுதிவரும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானிடம் 'இந்து தமிழ்' இணையதளத்துக்கு காற்று மாசு தொடர்பாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பஞ்சாப், ஹரியாணா, டெல்லி பகுதியில் உருவாகியுள்ள காற்று மாசு சென்னை வரை பரவியுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், "நிச்சயமாக ஹரியாணா, பஞ்சாப், டெல்லி பகுதிகளில் உருவான காற்று மாசுதான் காற்றின் நகர்வு காரணமாக சென்னை வரை பரவியுள்ளது. காற்றின் திசை குறித்து பல்வேறு தனியார் சுற்றுச்சூழல் கணிப்பு அமைப்புகள் விளக்கியுள்ளன. ஐரோப்பிய யூனியன் எர்த் அப்சர்ஷேன் எனும் அரசு அமைப்பும் கூட இதைத் தெளிவுபடுத்தியுள்ளது. காற்று மாசு கடந்த மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி அதிகரித்துள்ளது என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன.

தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள புல்புல் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து மழையைக் கொடுக்கும்போது, காற்றில் உள்ள துகள்களை இழுத்து அதனால் காற்று மாசு குறையத் தொடங்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை திங்கள்கிழமை முதல் காற்று மாசு குறையத் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

12 mins ago

ஜோதிடம்

16 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்