தந்தையைக் கொன்று பேஸ்மேக்கரை அகற்றிய மகள்: பாலியல் துன்புறுத்தலால் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து விபரீத செயல்

By செய்திப்பிரிவு

மூன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்துவந்த தந்தையைக் கொன்று அவரது இதயத்திலிருந்து பேஸ்மேக்கர் கருவியை அகற்றிய மகள் கைது செய்யப்பட்டார்.

மேற்கு டெல்லியின் ரஜோரிகார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தல்ஜித் சிங் (56). இவரது மனைவி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மூன்று மகள்களில் இருவருக்கு திருமணமாகி கணவர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். கடைசி மகள் குல்விந்தர் சிங் (23) மட்டும் தந்தையுடன் வசித்து வந்தார்.

மனைவி இறந்த பின் தல்ஜித் சிங்கின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பெற்ற மகள் என்றும் பாராமல் குல்விந்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கொடுமை நீடித்துள்ளது. தனது விருப்பத்துக்கு இணங்க மறுக்கும்போதெல்லாம் மகளை அடித்து உதைத்துள்ளார்.

ஆத்திரமடைந்த அந்தப் பெண் தனது நண்பர்கள் பிரின்ஸ் சாந்து (22), அசோக் சர்மா (23) ஆகியோருடன் சேர்ந்து தந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

அதன்படி கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் பிரின்ஸ் சாந்துவும் அசோக் சர்மாவும் தோழியின் வீட்டுக்குச் சென்றனர். அவர்களுக்காக காத்திருந்த குல்விந்தர் கதவைத் திறந்துவிட்டார்.

மூவரும் சேர்ந்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த தல்ஜித் சிங்கை கிரிக்கெட் கம்புகளால் தலையில் குறிவைத்து தாக்கினர். இதில் அவர் மயக்கமடைந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதய நோயால் பாதிக்கப்பட்ட தல்ஜித் சிங், இதயத் துடிப்பைச் சீராக்கும் பேஸ்பேக்கர் கருவியைப் பொருத்தியிருந்தார். மூவரும் சேர்ந்து உடைந்த பாட்டிலால் அவரின் இதயத்தைக் குத்திக் கிழித்து பேஸ்பேக்கர் கருவியை வெளியே எடுத்தனர்.

அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்து கொண்ட பிறகு கேபிள் வயரால் கை, கால்களைக் கட்டி சடலத்தை காரில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள கால்வாயில் வீசினர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தந்தை வெளியூருக்குச் சுற்றுலா சென்றிருப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் குல்விந்தர் கூறிவந்தார். இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு தல்ஜித் சிங்கின் உடல் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து கயாலா பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆரம்பம் முதலே குல்விந்தர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரித்தனர். இறுதியில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

“3 ஆண்டுகளாக சொந்த தந்தையே பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் அவரை தீர்த்துக் கட்டினேன்” என்று குல்விந்தர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பேரில் அந்தப் பெண் மற்றும் அவரது 2 நண்பர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

கொலைக்குப் பயன்படுத்திய கிரிக்கெட் கம்பு, கேபிள் வயர் மற்றும் ரத்தம் தோய்ந்த துணிகள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். சடலத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மனநல மருத்துவர் என்ன சொல்கிறார்?

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மனநல மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சந்திரலேகா கூறியதாவது:

குடிபோதையில் இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சொந்த தந்தையாக இல்லாமல் அம்மாவுக்கு 2 அல்லது 3-வது கணவராக இருப்பவர்கள் மகளிடம் தவறாக நடந்து கொள்வார்கள். பெண்ணுக்கு வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை என்றால், வேறு எங்கு பாதுகாப்பு இருக்க முடியும்?

அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட பெண், தந்தையே இதுபோல நடந்து கொள்கிறாரே? என எண்ணி மனது அளவில் வேதனைப்படுவார்.

தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என தன்னுடைய இயலாமையை நினைத்து கஷ்டப்பட்டு கொண்டிருப்பார். பாலியல் தொந்தரவு தொடர்ந்தால் ஆத்திரமடையும் பெண்கள் ஏதாவது ஒரு வழியில் தந்தையை கொலை செய்யவும் துணிந்துவிடுவார்கள்.

இந்த விஷயத்தில் பெண்ணை குற்றம் சொல்வதைவிட, மகள் என்றும் பார்க்காமல் முறைகேடாக நடந்துகொண்ட தந்தையின் வக்கிர புத்திதான் எல்லாவற்றிற்கும் முக்கிய காரணமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

க்ரைம்

43 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்