கர்நாடகாவில் மழைக்கு 5 பேர் உயிரிழப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு

இரா.வினோத்

கர்நாடக மாநிலத்தில் தொடரும் கனமழைக்கு 5 பேர் பலியாகியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் கடந்த ஆகஸ்டில் கொட்டித் தீர்த்த மழை வெள்ளத்தில் சிக்கி 91 பேர் பலியாகினர். 10 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்தனர். இதற்கு மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1,200 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கர்நாடக மாநிலத்தில் பெலகாவி, சிக்கோடி, தார்வார், குடகு, உடுப்பி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் பெலகாவி, சிக்கோடி, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதில் ஆற்றங்கரை ஓரத்தில் கட்டப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும் மக்களின் உடைமைகளும் அடித்துச் செல்லப்பட்டன.

சிக்கோடியில் ஆட்டோ, கார் உள்ளிட்ட 5 வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஹூப்ளி சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குடகு, ஹாசன், ஷிமோகா, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று காலை முதல் இரவு வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், சுவர்கள் இடிந்து விழுந்தன.

வயல்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம், தக்காளி, மாதுளை உள்ளிட்ட பயிர்கள் மிகவும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய இயக்குநர் ஜி.எஸ்.சீனிவாஸ் ரெட்டி கூறும்போது, “அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இரண்டு மேலடுக்கு சுழற்சியால் கர்நாடகாவில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. அடுத்து 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். கடலோர கர்நாடகாவில் 26.5 மிமீ மழையும் வட கர்நாடகாவில் 25.2 மிமீ மழையும் பெல்லாரியில் 19.5 மிமீ மழையும் பதிவாகியுள்ளது” என்றார்.

முதல்வர் எடியூரப்பா கூறும்போது, “கர்நாடகாவில் 108 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.38 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். பெலகாவி மாவட்டத்தில் கோழிப் பண்ணைக்குள் வெள்ளம் புகுந்ததால் 3,500 கோழிகள் நீரில் மூழ்கி இறந்தன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் அரசும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எனவே மக்கள் பீதியடைய வேண்டாம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்