முக்கிய பிராண்ட்கள் உட்பட பதப்படுத்தப்பட்ட பாலில் கலப்படம், தரமின்மை: மத்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அதிர்ச்சித் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி, பிடிஐ

முக்கிய பிராண்ட்கள் உட்பட நாட்டின் பதப்படுத்தப்பட்ட பாலில் சோதனைக்குட்படுத்தப்ப மாதிரிகளில் 37.7% மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட தரநிலை இல்லை என்று இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI)நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அளவுகோல்களிலும் 10.4% பதப்படுத்தப்பட்ட பால் சாம்பிள்கள் தோல்வியடைந்துள்ளது.

அதே போல் மொத்த சாம்பிள்களில் 12-ல் மட்டும் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது, இதில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், கேரள சாம்பிள்களில் அதிகக் கலப்படம் இருந்தது தெரிய வந்துள்ளது.

2018 மே மாதம் முதல் அக்டோபர் வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மத்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் மொத்தம் 1103 டவுன்கள் மற்றும் நகரங்களிலிருந்து சுமார் 6,432 பால் சாம்பிள்களைச் சேகரித்து சோதனைக்குட்படுத்தியது. இதில் 40.5% பதப்படுத்தப்பட்ட பாலின் மாதிரிகள் ஆகும், மீதி பதப்படுத்தப்படாத பாலின் மாதிரிகள் ஆகும்.

கலப்படம் மற்றும் தரநிலைகளை சரிபார்க்க உணவுப்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் முறைப்படுத்தப்பட்ட பால்பொருள்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தரநிலைகளுக்கு ஏற்ப பால் இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

“சாமானிய மக்கள் பாலில் கலப்படம் இருப்பதாக நம்புகின்றனர், ஆனால் தூய்மைக்கேடான பால் கலப்படத்தையும் விட ஆபத்தானது என்பதை எங்கள் ஆய்வில் தெரியப்படுத்தியுள்ளோம். பெரிய பிராண்டுகளின் பால் உட்பட தூய்மைக் கேடான கலப்படம் இருப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாதது” என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு தலைமைச் செயலதிகாரி பவன் அகர்வால் இந்த ஆய்வை வெளியிடும்போது தெரிவித்தார்.

அதாவது பூஞ்சைக்காளான் வகையான எஃப்ளேடாக்சின் - எம்1 (Aflatoxin-M1), ஆன்ட்டி பயாடிக்குகள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவை பதப்படுத்தப்பட்ட பாலில் அதிகமிருப்பதாக பவன் அகர்வால் மேலும் தெரிவித்தார்.

“எஃப்ளேடாக்சின் எம் 1 என்ற பூஞ்சைக்காளான் கலவை பதப்படுத்தப்பட்ட பாலில் அதிகமிருக்கிறது, பதப்படுத்தப்படாத பாலில் அவ்வளவாக இல்லை. இதில் தமிழ்நாடு, டெல்லி, கேரள மாநில பால்களில் இந்த அஃப்ளேடாக்சின் எம்1 கலந்திருப்பது அதிகம் உள்ளது. இது ஏன் வருகிறது என்றால் மாட்டுத்தீவனப்பொருட்களின் மூலம் வருகிறது, நாட்டில் தற்போது இதற்கான ஒழுங்குமுறைகள் இல்லை. நாட்டில் முதன் முதலாக இந்த ஆய்வில்தான் எஃப்ளேடாக்சின் எம்1 கலவை தெரியவந்துள்ளது.

அதே போல் ஒட்டுமொத்த பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் 37.7% மாதிரிகளில் கொழுப்பு, சர்க்கரை, மால்ட்டோடெக்ஸ்ட்ரின் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமுள்ளது தெரியவந்துள்ளது. பதப்படுத்தாத பாலிலும் தரநிலைகளுக்கு ஒத்துவராத நிலையே அதிகம் உள்ளது.

இது நாம் விழித்துக் கொள்ள வேண்டியதை அறிவுறுத்துகிறது. கொழுப்புகள், கொழுப்பு அல்லாத திடமங்கள் ஆகியவை இந்த பால் சாம்பிள்களில் உணவுப்பாதுகாப்பு ஆணையம் நிர்ணயித்த தரநிலை அளவுகோல்களில் இல்லை. எனவே பால்வளத்துறை இது குறித்து அடுத்த 6-8 மாதங்களில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்” என்கிறார் பவன் அகர்வால்.

இவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்விக்கு, “அவர்கள் எங்கள் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், மறுப்பார்கள், எங்கள் ஆய்வுகளை சேலஞ்ச் செய்வார்கள். இருந்தாலும் உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டேயாக வேண்டும்” என்றார்.

புதிய சோதனை மற்றும் ஆய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு டெய்ரி யூனிட்கள் ஜனவரி 1, 2020-க்குள் கட்டுப்பட வேண்டும்.

அதே போல் பதப்படுத்தப்படாத பால் விற்பனை முறைசாரா துறையில் தரநிலைகளை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மாட்டுத்தீவனங்களில் சரியான தரத்தைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பவன் அகர்வால் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்