இந்தியப் பெருங்கடல் வழி வணிகம்- பிரதமரின் அரசியல் சாணக்கியம்

By செய்திப்பிரிவு

கே.ஆர்.ஏ. நரசய்யா

அரசியல் ஆட்டங்கள், மாறுதல்கள் சகஜம். அவற்றை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வதுதான் ஒரு முதிர்ந்த அரசியல்வாதி யின் சாமர்த்தியம். இதை ஒருவிதமான சாணக்கியத்தனம் என்றே கூறலாம். அந்த வகையில் சமீபத்திய ரஷ்ய பயணத்தை பிரதமர் மோடி கையாண்ட நேர்த்தி அதிசயிக்க வைக்கிறது.

மாறிவரும் அரசியலில் சர்வதேச அமைப்புகள் தங்களது நோக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் சமயத்துக்கேற்ப மாற்றிக் கொள்கின்றன. இன்றைய நிலையில் இந்துமஹாசமுத்திரப் பரப்பு சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சீனா தனது வலிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக, தரை வழியிலும் கடல் வழியிலும் சில திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது. தரை வழியில் அவ்வப்போது டோக்லாம் பகுதியில் சில சில்மிஷங்களில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் கடல் வழியிலும் தனது சீர்திருத்தங்களில் முதலாவதாக இலங்கையின் துறைமுகங்களில் ஆலோசகர் என்ற முறையில் நுழைந்துள்ளது. ஹம்பந்தோட்டாவில் தொடங் கிய இந்தத் திட்டம் இப்போது கொழும்பு துறைமுகத்திலும் வந்து விட்டது. ஆகையால் இந்து மஹா சமுத்திரத்தில் இந்தியா தனது வலிமையை நிலைநாட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதை மோடி கையாளும் முறை நம்மை அதிசயிக்க வைக்கிறது.

‘ஸ்டிரிங் ஆஃப் பேர்ல்ஸ்’ என்று அறியப்படும் சீனாவின் உத்தி, கடல்வழி மார்க்கத்தை அதாவது மலாக்கா கடல் வழியாக வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் சோமாலியா வரை ஆதிக்கத்தை நிலைநாட்டத்தான் என்று தெரிகிறது.

இந்தியப் பெருங்கடல் பரப்பை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர மோடி அரசு திட்டமிடுவது சீனாவின் உத்தியைத் தோற்கடிக்கத்தான். இதற்கான தொடக்கமாக மோடி தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் முதலாவதாக மாலத்தீவு சென்றார். தொடர்ந்து தனது கவனத்தைச் செலுத்த மார்க்கங்களையும் உண்டாக்கிக் கொண்டார். அயல்நாட்டுத்தொடர்பில் இதற்காக, வங்கக் கடலில் உள்ள நாடுகளுடன் சுமுக உறவைத் தேடினார். பிம்ஸ்டெக் (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) அமைப்பின் மூலம் இத்தொடர்பை வலிவுறச் செய்தார்.

கடந்த வாரம் ரஷ்யா சென்றிருந்த மோடி, அந்நாட்டு அதிபர் புதினைச் சந்தித்தது இந்தியப் பெருங்கடலில் சில உத்திகளைக் கையாளத்தான். அங்கு அவர் தனது அரசியல் திறமையைக் காட்டினார். 20-வது ரஷ்ய-இந்திய உச்சி மாநாட்டின்போது அவர் புதினுடன் விளாடிவாஸ்டாக் என்ற துறைமுகம் சென்றது அரசியல் ரீதியாகப் பயனுள்ளதாக ஆகிவிட்டது. அங்கு பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பாதுகாப்பு, கடல்வழி இணைப்பு, இயற்கை எரிவாயு,அணுசக்தி மின்நிலையங்கள் மற்றும் கப்பல்கட்டும் திறமை போன்றவை அவற்றில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவற்றில் ஒரு முக்கிய அம்சம், சென்னை, விளாடிவாஸ்டாக் துறைமுகங்களை இணைப்பது தான். ஏற்கெனவே மும்பை துறைமுகமும், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகமும் கன்டெய்னர் வணிகம் மூலம் இணைந்திருந்த போதிலும், சென்னை விளாடிவாஸ்டாக் இணைப்பு, கடல் பாதுகாப்பு, இந்தியப் பெருங்கடலில் ரஷ்ய - இந்திய கடல்வழி வணிகம் மூலம், நிலைபாட்டைப் பெறுகிறது. இதன் மூலம் கடல்வழி வணிகமும் ஒரு பெரும் உந்துதலைப் பெறும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தப் புதிய கடல்வழி மூலம் தூரமும் குறைகிறது. மும்பை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கடல்வழி தூரம் 8,677 கடல்மைல்களாக இருக்கும்போது, சென்னைவிளாடிவாஸ்டாக் கடல்வழி தூரம் 5,647 கடல்மைல்கள்தான் எனும்போது இதன்மூலம் ஏற்படும் சிக்கனத்தையும் உணரலாம். இவ்வழியும் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வழியில், கீழை நாடுகளும் உள்ளதால், அவ்வர்த்தகமும் அதிகரிக்க வழி பிறக்கிறது. சீனாக் கடல் மூலம் வணிகக் கப்பல்கள் செல்வதால் பாதுகாப்பு வழியாகவும் இது முக்கியத்துவம் பெறுகிறது. சீனா எவ்வாறு இந்த ஏற்பாட்டை நோக்கும் என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியும். ஆனால் கடல்வழி வணிகத் திலும் பாதுகாப்பிலும் இது மோடியின் ஒரு மாபெரும் அதிரடி என்றே நாம் கொள்ளலாம். கடந்த வாரம் ரஷ்யாவும் இந்தியாவும் கையெழுத்திட்ட புரிந் துணர்வு ஒப்பந்தத்தால் விளைவுகள் என்னவாக இருக்கும்?

ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பகுதியைப் பார்வையிட்ட முதல் இந்தியப் பிரதமர் மோடிதான். இதன் மூலம் அவர் இந்தியாவின் கடல்வழி தூரப்பார்வையை நிலை நிறுத்தியுள்ளார். இதைக் குறித்து சற்றே தீவிரமாகக் கவனித்தால் இதன் முக்கியத்துவம் நமக்குப் புலப்படும். கிழக்கு வழி யாக ரஷ்யாவுடன் கொள்ளப்போகும் தொடர்பு, ரஷ்யாவுடனான வணிகம் மட்டுமின்றி, இடையில் உள்ள பல நாடுகளையும் வணிகம் மூலம் இணைக்கும்.

பழம்பெரும் நகரமான விளாடிவாஸ்டாக், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட, உலகிலேயே மிகவும் நீளமான ரயில் பாதை வழியாக ரஷ்யாவின் தலைநகரை இணைக்கிறது. விளாடிவாஸ்டாக் ரஷ்யாவின் பசிபிக் சமுத்திரத்தின் மிகப்பெரிய துறைமுகம் என்பது மட்டுமின்றி, அந்நாட்டு கடற்படையின் முக்கிய தளம் ஆகும். அங்கிருந்து சென்னை வரும் கப்பல், தெற்கில் ஜப்பான் கடலைக் கடந்து கொரிய தீபகற்பத்தைத் தாண்டி, தெற்கு சீனக்கடலைக் கடந்து தைவான், பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளைத் தொட்டு, சிங்கப்பூர் வழியாக சென்னை வந்தடையும் ஆகையால், இதுவரை இல்லாத அளவில், கடலில் இப்பகுதியில் இந்தியாவின் இருப்பை இம்முயற்சி உணர வைக்கும். இதை மோடியின் ஒருசிறந்த அணுகுமுறையாக நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், இதன் விளைவாக சீனாவின் அவ்விடத் துக் கடல் ஆக்கிரமிப்பு குறையும்.

மேலும் ரஷ்யாவின் ஒத்துழைப் போடு, கூடங்குளம் அணுசக்தி மின் நிலையத்தின் உற்பத்தியை அதிகரிக் கலாம். தவிரவும் மற்ற இடங்களில் அணுசக்தி மின் நிலையங்களை நிறுவவும் இவ்வழி உதவும். தவிரவும் இம்முயற்சி, இந்தியா இவ்வழியில் ஒரு துடிப்பான கடல்வழி முன்னிலை அடையவும் அடிகோலும். சீனா தனது இருப்பை காட்டிக் கொண்டிருக்கும் இவ் வேளையில் நாமும் நமது சக்தியைக் காட்டிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கடந்த ஆண்டே மோடி அவர்கள் காலம் சென்ற முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மூலமாக இத்திட்டத்துக்கு அஸ்திவாரமிட்டார் என்பதையும் இந்த நேரத்தில் மறந்துவிடக் கூடாது. அப்படித்தான் அவரது தொலைநோக்கை நாம் கவனிக்க வேண்டும். அப்போதே சீனாவின் மாரிடைம் சில்க் ரூட் (கடல்வழி பட்டுப் பாதை) மூலம் இக்கடற் பகுதிகளில் தனது வலிமையை நிலைநாட்ட சீனா முயற்சி எடுத்துள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு அதை முறியடிக்கத் திட்டமிட்டார் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆகையால் அம்முயற்சியைத் தொடர்ந்து அவர் இப்போது அடுத்த அடி எடுத்துள்ளார் என்பதும் இதன்மூலம் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் நிலநாட்டிய இதே கடல்வழி ஆளுமையை அவர் மறுபடியும் உரக்கத் தெளிவுபடுத்துகிறார் என்பதும் உண்மை.

வணிகப் பெருமகனின் கல்வெட்டு

நாகப்பட்டினம் வழியாக சோழர் காலத்து கப்பல்கள் வணிக நிமித்தம் சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள க்வான்ஷூ என்ற துறைமுகத்தில் தமது வணிகத்தைச் சிறப்பாக நடத்திய வரலாறு, சம்பந்தப் பெருமாள் என்ற தமிழ் நாட்டு வணிகப் பெருமகனின் கல்வெட்டு மூலம் நமக்குத் தெரிகிறது. ஆகையால் மோடி இப்போது எடுத்துள்ள முயற்சியை நமது முன்னோர்களுக்கு அவர் செலுத்தும் அஞ்சலியாகவே நாம் கொள்ளலாம்.

க்வான்ஷூ கல்வெட்டு வாசகம்

1. ஹர: ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் 1203-வது சித்திரை

2. ச் சித்திரை நாள் ஸ்ரீ செ[காசெ] கான் திருமேனிக்கு நன்

3. றாக உடையார் திருக் [கா]னீச்சுரமுடைய நாயனாரை

4. ஏறியருளப் பண்ணினார் சம்பந்தப் பெருமாள்

5. ஆன தவச் சக்கிரவர்த்திகள் செ சு சை கான் பர்மான்

6. படி

(தவச் சக்கிரவர்த்தி என்ற சம்பந்தப்பெருமாள் என்ற வணிகப் பெருமகன், அன்றைய சீன மன்னனான சைக்கா கானிடமிருந்து க்வான்ஷூ துறைமுகத்தில் பெற்ற நிலத்தில் சிவ பெருமானுக்கு கோயில் எழுப்பி, அச்சிவன் கோவிலுக்கு திருக்கானீச்சுவரம் என்ற பெயருமிட்டான். சிவனுக்கு கான் மன்னனின் நினைவாகக் கானீஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளான்) இது 13-ம் நூற்றாண்டில் தமிழர் வணிகம் தலைசிறந்து நின்ற போது நடந்தது.

கே.ஆர்.ஏ. நரசய்யா ஒடிசா மாநிலம், பர்ஹாம்பூரில் பிறந்தவர். தாய்மொழி தெலுங்கு. தமிழை விரும்பிக் கற்றவர். கப்பற்பொறியியல் படித்து 10 வருடங்கள் கடற்படை கப்பல்களிலும் 3 வருடங்கள் வணிகக் கப்பல்களிலும் பணியாற்றியவர். இந்திய கப்பற்படையின் விமானந்தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் முதல் ஃப்ளைட் டெக் சீஃப் ஆகப் பணியாற்றியவர்.

பின்னர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளராக பதவியேற்றார். 1994 முதல் 1996 வரை உலக வங்கியில் கடல், துறைமுகம் சார்ந்த ஆலோசகராகப் பணியாற்றி உள்ளார். கடல்சார் கல்வி நிலையங்களில் இப்போதும் வகுப்பு எடுத்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

32 mins ago

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்