வாசிப்பை நேசிப்போம்: ஆதலினால் புத்தகம் வாசிப்பீர்

By செய்திப்பிரிவு

நான் பள்ளியில் படித்தபோது குலதெய்வ வழிபாட்டுக்காக மதுரை சென்றிருந்தோம். பழங்களும் பொருட்களும் வாங்கக் கடைவீதியில் இறங்கினோம். அப்பாவின் கையைப் பிடித்தபடி மதுரைக் கடைவீதியில் நடந்தபோது எட்டு வயது எனக்கு. ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தவள், ஒரு கடையைப் பார்த்ததும் அப்பாவின் கையை இறுகப் பிடித்தபடி அப்படியே நின்றுவிட்டேன். அது, பழைய புத்தகக் கடை. “அப்பா அது வேணும்” என்றேன். அப்படி நான் கேட்டது அட்லஸ் (Atlas). சிரித்தபடி அப்பாவும் வாங்கித் தந்தார். அன்று தொடங்கி இன்றுவரை எங்கே சென்றாலும் புத்தகங்களை மட்டுமே வாங்கிச் சேர்க்கிறேன்.
சிறு வயதில் பேச்சுப் போட்டிக்குத் தயாரானபோது பாரதியார் கவிதைகளை அறிமுகப்படுத்தியவர் அப்பா. வார இதழ் வாசிப்பை இன்றுவரை தொடரக் காரணம் அம்மா. தற்போது ஆசிரியராகப் பணியாற்றுவதால் குழந்தைகள் சார்ந்த புத்தகங்களை அதிகமாக வாசிக்கிறேன்.

மாணவர்களை மேம்படுத்த ஆசிரியர்கள் செய்ய வேண்டிய முதல் பணி புத்தக வாசிப்புதான். அப்படி எனக்கு முதலில் அறிமுகமானவர் எழுத்தாளர் நடராசன். அவர் எழுதிய ‘ஆயிஷா’ குறுநாவலை ஒரு மாலை நேரத்தில் வாசித்துவிட்டு மாலை மாலையாய் அழுது கண்கள் சிவந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து ‘என் சிவப்பு பால்பாயின்ட் பேனா’, ‘ஆசிரிய முகமூடி அகற்றி’ எனப் பல புத்தகங்கள் என்னைச் சீர்படுத்தியுள்ளன. இதுவரை நாம் பார்த்தும் கேட்டும் வளர்ந்த, நம் மூளையில் படிந்துள்ள ஆசிரியத்தன்மைகளை அகற்ற இந்தப் புத்தகங்கள் பேருதவியாக இருந்தன.

ஒவ்வொரு புத்தகத்தை வாசித்து முடிக்கும்போதும் ஒருவிதப் புத்துணர்வு மனதெல்லாம் பரவுவதை உணர முடிகிறது. இந்தப் புத்துணர்வின் சுவை பிறருக்கும் பரவ வேண்டுமெனத் தோன்றியது. அதனால், என் வீட்டிலேயே சிறிய அளவில் வாசிப்பு முகாம் நடத்தத் தொடங்கிவிட்டேன். மாதத்துக்கு ஒரு கூட்டம். அம்மா, அப்பா, அத்தை, சித்தி, பக்கத்துவீட்டு அக்கா, எதிர்வீட்டுச் சகோதரி என எல்லோரது கைகளிலும் புத்தகங்களைக் கொடுத்தோம். ஆளுக்குப் பத்துப் பக்கங்கள் வாசிக்க வேண்டும். இறுதியில், வாசித்தவற்றைப் பற்றிக் கலந்துரையாட வேண்டும். இதுவரை மூன்று கூட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு கூட்டமும் அருமையான அனுபவமாக அமைந்தது.

பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் அவரவர் வயதுக்கேற்றாற்போல் புத்தகம் கொடுத்து வாசிக்கச் சொல்கிறோம். தரமான உரையாடல் நிகழ்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. கதைகள் வழக்கொழிந்து போய்விட்ட இன்றைய சூழலில், பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இணைப்புப் பாலமாக இருக்கிற கதைகளைப் பற்றி வாசிப்புக் கூட்டத்தில் பேசுவோம். ‘கதை கதையாம் காரணமாம்’ என்ற பெற்றோருக்கான கதை வழிகாட்டி நூலை வாசிக்க வைத்த பிறகு கதைகூறல் பற்றிய வாசிப்பாளரின் பார்வையே மாறிவிட்டது! எப்போது அடுத்த கூட்டம் எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர் பிள்ளைகள். இதைவிட வேறென்ன வேண்டும் இப்பெரு வாழ்வில்?

இந்த வாசிப்புக் கூட்டத்தின்வழி தண்ணீர்ப் பிரச்சினை, ஞெகிழி பயன்பாடு போன்ற பல நிகழ்காலப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும் செயல்படவும் செய்கிறோம். வாசிப்பின்வழி மனித உறவுகளும் உரையாடலும் மேம்படுகிறதெனில் வாழ்க்கை முழுக்க வாசிப்பை நேசிக்கலாமே. ஆதலினால், நீங்களும் வாசிப்பீர்.

- பா.ப்ரீத்தி,

அரசுப் பள்ளி ஆசிரியர், கும்பகோணம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்