கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு 23 பேர் பலி; கொச்சி விமான நிலையம் மூடல்: 22 ஆயிரம் பேர் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்,

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கொட்டித் தீர்த்துவரும் கனமழைக்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொச்சியில் பெய்த மழையால் விமான நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்ததது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மழையால் வயநாடு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடகம், கேரளா, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்கள், ஆந்திரம் ஆகிய தென் மாநிலங்களில் கடந்த இரு நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரி : படம் ஏஎன்ஐ

எச்சரிக்கை

கேரளாவில் கடந்த இரு நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் இந்த மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்பதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோழிக்கோடு பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சி : படம் ஏஎன்ஐ

கேரளாவின் பொழியூர் முதல் காசர்கோடு கடற்கரை வரை கடற்பகுதி மிகுந்த கொந்தளிப்பாக இருக்கும். 3.2 மீட்டர் முதல் 3.7 மீட்டர் உயரம் வரை அலை சனிக்கிழமை வரை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கனமழையால், மராரிக்குளா-ஆழப்புழா இடையிலான தண்டவாளம் மழைநீரில் மூழ்கிவிட்டதால், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும் மாவேலி எக்ஸ்பிரஸ், ராஜ்தானி, தான்பாட் எக்ஸ்பிரஸ் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகியவே பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன.

விமான நிலையம் மூடல்

பெரியாறு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கொச்சி விமானநிலையத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால், இன்று இரவுவரை விமானப் போக்குவரத்து இயக்கம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்பின் ஞாயிற்றுக்கிழமை 3 மணி வரை விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கொச்சி விமான நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கோழிக்கோடு மாவட்டத்தில் வட்டக்காரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேரைக் காணவில்லை என்று மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் வந்துள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் ஆற்று நீரும், மழை வெள்ளமும் சாலையில் சென்றதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எடவானா நகரில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கோழிக்கோடு நகரத்தைச் சூழ்ந்துள்ள வெள்ள நீர்

12 பேர் பலி

கேரளாவில் மழைக்கு கடந்த இரு நாட்களில் 12 பேர் பலியானதாகவும், அதில் வடக்கு கேரளாவில் மட்டும் 8 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மழைக்கு 23 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு இன்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலத்தில் உள்ள 315 நிவாரண முகாம்களில் 22 ஆயிரத்து 165 மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் வயநாடு பகுதி அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 105 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு 9,915 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மலப்புரத்தில் 26 முகாம்களில் 4,106 பேர் தங்கியுள்ளனர்.

நிலச்சரிவு

கேரள வருவாய்த் துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் நிருபர்களிடம் இன்று கூறுகையில், " போபால் நகரில் இருந்து பேரிடர் மீட்புப் படையினரும், நீலகிரியில் இருந்து இரு குழுக்களும் மீட்புப்பணிக்கு வந்துள்ளனர். வயநாடு மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோரைக் காணவில்லை என்று தகவல் வந்துள்ளது. ஒரு கோயில், மசூதி, இரு வீடுகள், வாகனங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகத் தெரிகிறது " எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே முதல்வர் பினராயி விஜயன் நேற்று இரவு அரசு உயர் அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் அவசரமாக ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாவட்டங்களில் மழையால் மோசமான சூழல் நிலவுவதால் அதை எதிர்கொள்ளும் விதமாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு சனிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளை நடக்க இருந்த கேரள அரசுப் பணித் தேர்வு, பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்