பெங்களூரு முழுவதும் அடுத்த 48 மணிநேரத்துக்கு 144 தடை உத்தரவு அமல்

By செய்திப்பிரிவு

பெங்களூரு, ஏஎன்ஐ

 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில், பெங்களூரு நகரம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து மும்பை சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். இதனிடையே,  2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று,  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் கர்நாடகத்தில் ஆளும் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டது


முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 18, 19ம் தேதிகளில் விவாதம் நடந்தது. அது முழுமை பெறாததால், இந்த விவாதம் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பை 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கக் கோரி முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை ஏற்க சபாநாயகர் ரமேஷ் குமார் மறுத்துவிட்டார். மேலும், மும்பையி்ல் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சியின் கொறடா உத்தரவிட்டும் அவர்கள் வரவில்லை என்று ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சி தலைமை சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தன.


அந்தப் புகாரின் அடிப்படையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை 11 மணிக்கு தன்னைச் சந்திக்க வேண்டும் எனக் கோரி சம்மன் அனுப்பி சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்

 

இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. ஆனால், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒத்துழைக்கவில்லை. முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் தொடர்ந்து அவகாசம் கேட்டனர்.


அதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் ரமேஷ் குமார், " நாளை (இன்று) மாலை 4 மணிக்குள் விவாதம் அனைத்தையும் முடிக்க வேண்டும். மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க  வேண்டும். நாளை காலை 10 மணிக்கு அவையை ஒத்திவைக்கிறேன் " என்று உத்தரவிட்டார்.இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, ஜேடிஎஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் பேசினார்கள்.

 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹெச் நாகேஷ், ஆர் சங்கர் ஆகியோர் பெங்களூரு ரோஸ் கோர்ஸ் பகுதியில் இருந்து புறப்பட இருந்தனர். ஆனால், அவர்களை வெளியே வரவிடாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் செய்து சுற்றி வளைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சட்டப்பேரவை வளாகத்தில் கூடியிருந்த பாஜகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


இதையடுத்து அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டு காங்கிரஸ், பாஜகவினரை கைது செய்து அழைத்துச் சென்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பெங்களூரு போலீஸ் ஆணையர் ஆலோக் குமார் பெங்களூரு நகரம் முழுவதும் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். பெங்களூருவில் உள்ள அனைத்து மதுக்கடைகள், பப்புகள் அனைத்தும் 48 மணிநேரத்துக்கு மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஆணையர் ஆலோக் குமார் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்