சீன அதிபருடன் மோடி பேச்சு: எல்லையில் அமைதி, நம்பிக்கையை வலுப்படுத்த ஆலோசனை

By பிடிஐ

எல்லையில் அமைதியைப் பேணுதல், இரு நாடுகள் இடையே நம்பிக்கையை வலுப்படுத்துதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி ஆலோசனை பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீனா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு, அதிபர் ஜி ஜின்பிங் தன் சொந்த ஊரான ஜியான் நகரில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தார்.

ஜி ஜின்பிங் இந்தியா வந்தபோது அவரை தனது சொந்த ஊரான அகமதாபாத்தில் மோடி வரவேற்றார். அதனை கவுரவிக்கும் விதத்திலேயே மோடி தனது பயணத்தை ஜியானில் தொடங்கும் வகையில் சீன அரசு பயணத் திட்டத்தை வடிவமைத்தது.

இந்த வரவேற்பு குறித்து பேசிய மோடி, "125 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக ஒரு பிரதமராக எனக்கு அளிக்கப்பட்ட கவுரம்" எனப் பெருமிதமாகத் தெரிவித்தார்.

அதிபர் ஜி ஜின்பிங் பேசும்போது, "உங்களது (மோடி) சொந்த ஊரில் எனக்கு மிகச்சிறந்த விருந்தோம்பலை அளித்தீர்கள். உங்களை எனது ஊரில் வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்" என்றார்.

சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டுத் தலைவர் ஒருவருடன் பெய்ஜிங்குக்கு வெளியே ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியது இதுவே முதல்முறை என்பது கவனிக்கத்தது.

எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சு

அரசியல், பொருளாதாரம், பயங்கரவாதம், ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் மறுசீரமைப்பு, அணுக்கரு விநியோகஸ்தர்கள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராதல் உள்ளிட்ட விவாகரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் கூறும்போது, "இருதரப்புக்கும் இடையே நம்பிக்கையை வலுப்படுத்துதல் மற்றும் ஒற்றுமையை அதிகரித்தல் குறித்து நீண்ட விவாதம் நடந்தது. எல்லைப் பிரச்சினை, அமைதி பேணுதல், இரு நாடுகளிலும் பாயும் ஆறுகள் தொடர்பான விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டில் இரு தலைவர்களும் 3-வது முறையாக சந்தித்துப் பேசுகின்றனர். இந்த பேச்சுவார்த்தை சூழல் மிகவும் உகந்ததாக இருந்தது. இரு தலைவர்களுக்கு இடையே கடந்த செப்டம்பரில் ஏற்பட்ட இணக்கம் தொடர்கிறது

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை வர்த்தகப் பற்றாக்குறை தற்போது சீனாவுக்கு சாதகமாகவே உள்ளது. இதுதொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் நேற்று காபூலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல், நேற்று முன்தினம் கராச்சியில் நடைபெற்ற தாக்குதல் உள்ளிட்டவை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ஐ.நா.வில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சர்வதேச தீவிரவாதத்தின் மீதான ஒருங்கிணைந்த உடன்படிக்கை (சிசிஐடி) தொடர்பான பேச்சுவார்த்தையில் துரிதமாக முடிவெடுக்க மோடி வலியுறுத்தினார்" என்றார் அவர்.

இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்சினை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனைத் தீர்க்க இரு நாடுகளும் சிறப்பு பிரதிநிதிகள் மூலம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. சிறப்புப் பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் இதுவரை 18 சுற்றுகள் நடைபெற்றுள்ளன.

இந்தியா-சீனா இடையே மொத்தமுள்ள 4,000 கி.மீ. எல்லைப்பகுதியில் 2,000 கி.மீ. தொலைவு எல்லைப்பகுதி தொடர்பாகவே குறிப்பாக அருணாச்சலப் பிரதேச பகுதிகள் தொடர்பாகவே பிரச்சினை இருந்து வருகிறது. மேலும், பாகிஸ்தானால் சீனாவுக்கு அளிக்கப்பட்ட அக்சாய் சின் பகுதி தொடர்பாகவும் பிரச்சினை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்