கிருஷ்ணகிரி பாங்க் ஆப் பரோடா வங்கியில் 45 கிலோ தங்கம் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி அடையாளம் தெரிந்தது: உ.பி.யில் தமிழக போலீஸார் தேடுதல் வேட்டை

By ஆர்.ஷபிமுன்னா

கிருஷ்ணகிரி பாங்க் ஆப் பரோடா வங்கியில் 45 கிலோ தங்கம் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளிகள் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்வதற்காக அம்மாநிலத்தின் பரேலி, பதாயூ பகுதிகளில் தமிழக போலீஸ் படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

கிருஷ்ணகிரியின் ராமாபுரத்தில், பாங்க் ஆப் பரோடா வங்கியின் குந்தாரப்பள்ளி கிளை உள்ளது. இதில் கடந்த ஜனவரி 23-ம் தேதி நள்ளிரவு மிகப் பெரிய கொள்ளை நடந்தது.

கொள்ளையர்கள், மேற்கு உ.பி.யில் உள்ள பரேலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கைப்பேசி உரையாடல்களை கண்காணித்ததன் மூலம் தமிழக போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதில் முதலாவதாக, பரேலி அருகிலுள்ள பதாயூ மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயது முகம்மது ஷானவாஸ், கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் பெறப்பட்ட தகவலின்படி, 27 வயதான அப்ரார் உசைன், பரேலியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்தச் செய்தி விரிவாக, கடந்த மார்ச் 16-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் மட்டும் வெளியானது. இவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில் அந்த கொள்ளையின் முக்கிய குற்றவாளிகள் பதாயூ மாவட்டத்தில் உள்ள காக்ரலா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது சாஜித் மற்றும் சாதிக் முகம்மது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரேலி மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் சுரேந்தர் பிரதாப் சிங் ‘தி இந்து’விடம் கூறும்போது, “அந்த இரு சகோதரர்கள் தான் கிருஷ்ணகிரி கொள்ளையின் முக்கிய குற்றவாளிகள் என தமிழக போலீஸார் நம்புகின்றனர்.

இந்த இருவர் மீதும் பரேலியின் சுற்றுப் பகுதிகளிலும் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே அவர்களை தேடும் பணியில் எங்கள் படையினரும், தமிழக போலீஸ் படைகளும் பரேலி, பதாயூ மற்றும் டெல்லி பகுதிகளில் தனித்தனியே ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் சொந்த ஊரான காக்ரலாவில் இதற்கு முன் பல கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையிலான தமிழக போலீஸ் படை பரேலியில் தங்கியிருந்தது. அப்ரார் உசைன் கைதுக்கு பின் இப்படையில் ஒரு பகுதியினர் பரேலியில் தங்கியுள்ளனர்.

இதில் ஓர் ஆய்வாளர் தலைமையில் 2 துணை ஆய்வாளர்கள் மற்றும் 3 காவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி கொள்ளைக்குப் பின் சாஜித், சாதிக் ஆகிய இருவரும் பரேலியில் உள்ள பிலிபித் பைபாஸ் நெடுஞ்சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதாக இவர்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

அங்கு தமிழக போலீஸ் படை போய் சேர்வதற்குள் அந்த இருவரும் அங்கிருந்து தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் சேர்த்து கிருஷ்ணகிரி கொள்ளையில் ஈடுபட்டதாகக் கருதப்படும் மேலும் 3 கொள்ளையர்களையும் தமிழக போலீஸ் படை தேடி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்