என் அரசின் மதம் இந்தியா; சட்டம்தான் மதநூல்- மவுனம் கலைத்த மோடி நாடாளுமன்றத்தில் உணர்ச்சிகரம்

By பிடிஐ

அண்மைக்காலமாக மதமாற்ற சம்பவங்கள், சிறுபான்மை வழி பாட்டுத் தலங்கள் மீதான தாக்கு தல், சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சில பாஜக எம்.பி.க்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் தொடர்பாக தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மக்களவையில் முதன்முறையாக தனது கருத்தைத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மக்கள வையில் நேற்று பேசியதாவது:

‘முதன்மையானது இந்தியா’ என்பதுதான் என் அரசாங்கத்தின் ஒரே மதம். அரசியலமைப்புச் சட்டம்தான் ஆன்மிக நூல். மதம் என்ற பேரில் முட்டாள்தனமான கருத்துகள் கூறப்படுவதை அனு மதிக்காமல் இருப்பது, பிரதமர் என்கிற முறையில் எனது பொறுப்பாகும். மதத்தின் அடிப் படையில் பாரபட்சம் காட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள யாருக்கும் உரிமையில்லை.

அரசியல் காரணங்களாக கடைப்பிடிக்கப்படும் மதவாதம் தேசத்தை அழித்து விட்டது. இதயங் கள் நொறுங்கிவிட்டன. அனைத்து மதங்களுமே வளமைக்காகத்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்ட இந்திய வரலாற்றைச் சிந்தித்தே அரசியல் சாசனம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இத்தேசம் பன்மைத் தன்மை களால் நிறைந்திருக்கிறது. நாம் வேற்றுமையில் ஒற்றுமை காண் பதற்காகவே இருக்கிறோம்; ஒற்றுமை குலைவுக்காக அல்ல. அனைத்து மதங்களும் செழிக்க வேண்டும் என்ற தன்மை இந்தியாவின் பிரத்யேகக் கூறாக உள்ளது.

அரசியல் சாசன கட்டமைப் புக்கு உட்பட்டு, இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மூவர்ணம் தவிர வேறு வர்ணத்தை நான் பார்க்கவில்லை. கடந்த 2013-ம் ஆண்டு பாட்னாவில் நான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந் தன. அப்போது, “இந்துக்களே நீங்கள் வறுமைக்கு எதிராகப் போராடப்போகிறீர்களா அல்லது முஸ்லிம்களுக்கு எதிராகவா? முஸ்லிம்களே நீங்கள் வறுமைக்கு எதிராகப் போராடப்போகிறீர்களா அல்லது இந்துக்களுக்கு எதிராகவா? நாம் போதுமான அளவு சண்டையிட்டு விட்டோம். இனி நாம் ஒன்றிணைந்து வறுமைக்கு எதிராகப் போரிடுவோம்” என்று கூறி யதை இங்கு நினைவு கூர்கிறேன்.

இத்தேசத்தின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நம்மிடையே உள்ள பழமையான, பரம்பரை பரம்பரையாகத் தொடரும் பிரச் சினைகளுக்கு நாம் தீர்வுகளைக் காண்போம்.

ஊழலற்ற நிர்வாகம்

சில துறைகளில் எனக்கு போதிய அறிவு இல்லை என நீங்கள் கூற லாம். ஆனால், எனக்கு கொஞ்சம் அரசியல் அறிவு உள்ளது. நான் எப்படி மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை கைவிடுவேன்? இத்திட்டம்தான் உங்களின் (காங்கிரஸ்) தோல்வி களுக்கு வாழும் உதாரணம்.

ஊரக வேலை உறுதித் திட்டம் நேர்மையாகவும் கண்ணியத்துட னும் தொடரும். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன பிறகும், ஏழைகளுக்கு நீங்கள் தீட்டிய திட்டத்தின் மூலம் அவர்களை தொடர்ந்து நிலத்தில் குழி தோண்ட வைத்ததைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன்.

இதுவரை செய்த சாதனைகள் அனைத்தும் கடந்த 9 மாதங்களில் செய்யப்பட்டவைதான் என உரிமை கோர மாட்டோம். முந்தைய அரசுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகளையும் தெரிவிப்போம். 1947-ல்தான் இந்தியா உருவானது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை யில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இத்தேசம் உள்ளது. சித்தாந்தங்கள் வரும் போகும். அரசுகள் வரும் போகும். தேசங்கள் தத்துவங்களிலிருந்தே கட்டமைக்கப்படுகின்றன. இந்தியா வின் அடிப்படைத் தத்துவம் அனைவருக்கும் நலம் என்பதாகும்.

கருப்புப் பண விவகாரத்தைப் பொறுத்தவரை நாங்கள் அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்று வோம். ஊழலற்ற நிர்வாகமே நாட்டை முன்னேற்றும். கடந்த கால முறைகேடுகளில் கவனம் செலுத்துவதை விட, எதிர்காலத்தில் ஊழல் நடைபெறாமல் தடுப்பதே முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

39 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

ஜோதிடம்

8 mins ago

சினிமா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்