ஜெ. மேல்முறையீட்டு வழக்கு தொடங்கியது: வழக்கை ஒத்திவைக்க நீதிபதி மறுப்பு - சுப்பிரமணியன் சுவாமி, திமுக மனு

By இரா.வினோத்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில் வழக்கை சில தினங்களுக்கு ஒத்திவைக்கும்படி விடுத்த கோரிக்கையை நீதிபதி கண்டிப்புடன் மறுத்துவிட்டார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இள வரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு 14-வது நீதி மன்ற ஹாலில், நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கில் சேர்க்க சுவாமி மனு

விசாரணை தொடங்கியதும் சுப்பிரமணி யன் சுவாமி தன்னையும் இவ்வழக்கில் சேர்த் துக் கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அப்போது நீதிபதி, ‘நீங்கள் யார்? உங்களுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு? என கேள்வி எழுப்பினார்.

அப்போது சுப்பிரமணியன் சுவாமி, “ஜெயலலிதா மீது முதன்முதலாக சொத்துக் குவிப்பு புகாரை நான்தான் தொடர்ந்தேன். மேல்முறையீட்டு விசாரணையில் நான் வாதிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது” என்றார்.

நீதிபதி, சுப்பிரமணியன் சுவாமியிடம் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணை யின் நகலை கேட்டார். அதற்கு சுப்பிர மணியன் சுவாமி, ‘ நகலை நான் கொண்டு வரவில்லை'என்றார். இதையடுத்து, ‘உச்ச நீதிமன்ற ஆணையின் நகலை சமர்ப்பித்த பிறகு உங்களது மனு குறித்து பரிசீலிக்கிறேன்' என நீதிபதி தெரிவித்தார்.

திமுக தரப்புக்கு எச்சரிக்கை

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசன், ‘‘மேல்முறையீட்டு மனு விசாரணையில் தங்களையும் இணைத் துக் கொள்ள வேண்டும்’ என மனு தாக்கல் செய்தார். இதற்கு அரசு வழக் கறிஞர் பவானிசிங் எதிர்ப்பு தெரிவித்தார்.

‘‘தீர்ப்பு வெளியாகிவிட்ட தால், மேல் முறையீட்டில் நீங்கள் தேவையில்லை'' என்றார் நீதிபதி.

அதற்கு வழக்கறிஞர் குமரேசன், ‘‘திமுக தலையிடா விட்டால் அரசு வழக்கறிஞரின் அலட்சிய போக்கால், தீர்ப்பு வெளியாவதில் தவறு ஏற்படும் சூழல் உருவாகி யிருக்கும்''என்றார்.

நீதிபதி குமாரசாமி பேசும்போது,''இது சட்டமன்றமோ,நாடாளுமன்றமோ இல்லை.இங்கு அரசியல் பேசக்கூடாது. உங்களை வழக்கில் இணைப்பது குறித்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்ப்பு தெரிவித் துள்ளார். உங்களது மனுவுக்கு அவர் புதன்கிழமை ஆட்சேபணை மனு தாக்கல் செய்வார். அதன்பிறகு உங்களை வழக்கில் இணைப்பது பரிசீலிக்கப்படும்'' என்றார்.

தனியார் நிறுவனங்களின் கோரிக்கை

இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 6 தனியார் நிறுவனங்கள் சார்பில் வழ‌க்கறி ஞர் உதயஹொள்ளா ஆஜரானார். சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து எங்களது நிறுவனங்களை விடுவிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை, சொத்துக் குவிப்பு வழக்கின் விசார ணையோடு சேர்த்து நடத்த வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை நீதிபதி குமாரசாமி ஏற்றுக்கொண்டார்.

ஜெ தரப்புக்கு கடும்கண்டனம்

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் பேசும்போது,''இவ்வழக்கின் மேல் முறையீட்டில் டெல்லியைச் சேர்ந்த‌ மூத்த வழ‌க்கறிஞர் வாதிட இருக்கிறார். எனவே வழக்கை வருகிற 12-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்''என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி குமாரசாமி, ‘‘மேல்முறையீட்டு வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறி இருக்கிறது. ஒரு மணி நேரம் கூட தாமதிக்கக் கூடாது. உடனே வாதத்தை தொடங்குங்கள்'' என்றார்.

இதையடுத்து பி.குமார், சுமார் 5 மணி நேரம் சொத்துக்குவிப்பு வழக்கு கடந்து வந்த வரலாற்றை விவரித்தார். இடையிடையே நீதிபதி குமாரசாமி,சில சந்தேகங்களை எழுப்பி விவரங்களை பதிவு செய்து கொண்டார்.

நேற்று மாலை 4.30 மணிக்கு வழக்கின் விசாரணை முடியும் தருவாயில் மீண்டும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் பி.குமார், அசோகன்,செந்தில் ஆகியோர், ‘‘டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர்கள் வருவதால் வழக்கு விசாரணையை 2 நாட்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும்''என கோரினர்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி குமாரசாமி, ‘‘இவ்வழக்கை நாள்தோறும் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது பல்வேறு எதிர்ப்பார்ப் புகளும்,அழுத்தங்களும் நிறைந்த வழக்கு. முதல்நாளான இன்றே பல நிறைய மனுக்கள் வந்திருக்கின்றன. வழக்கு விசாரணையை 45 நாட்களுக்கு முடிக்க திட்டமிட்டுள்ளேன். அதன் பிறகு தீர்ப்பு எழுத, எனக்கு கால அவகாசம் தேவைப்படும். டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் வருகிறார் என்றால், இப்போது ஆஜரான பி.குமார் யார்? யாரெல்லாம் இவ்வழக்கில் ஆஜராக போகிறீர்கள்? எதற்காக தேவையில்லாமல் கால அவகாசம் கேட்குகிறீர்கள்? குமார் ஊருக்கு சென்றால் இங்குள்ள மற்ற வழக்கறிஞர்கள் வாதிடுங்கள். எக்காரணம் கொண்டும் வழக்கை தாமதிக்கக் கூடாது'' எனக்கூறி வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

சினிமா

45 mins ago

க்ரைம்

26 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

39 mins ago

தொழில்நுட்பம்

21 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்