சூடுபிடிக்கும் அணிகள் இணைப்பு விவகாரம்: மத்திய அரசை விமர்சிக்க அஞ்சும் தினகரன்- அதிருப்தியில் ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள்

By இரா.வினோத்

அதிமுக (அம்மா) துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சிக்க அச்சப்படுவதாலும், தமிழக அரசுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காததாலும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் முக்கிய நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்ற போது அக்கட்சி இரு அணிகளாக பிரிந்தது. சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட டிடிவி தினகரன் மீது தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

சசிகலா குடும்பத்தினரால் முதல்வராக்கப்பட்ட எடப் பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் புதிய குழுவாக உருவாகி, அந்த குடும்பத்துக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். சசிகலாவையும், தினகரனையும் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் எதிர்த்து வருகின்றனர். அதிலும் எடப்பாடி பழனிசாமி, தினகரனை ‘420' என திட்டியது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“அதிமுகவில் அரங்கேறும் இத்தனை குழப்பங்களுக்கும் பாஜகவே காரணம் என எல்லோருக்கும் தெரியும். அதிமுகவை அழிப்பதில் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் உறுதியாக இருக்கிறார்கள். இந்த இருவர்தான் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் இயக்கி வருகிறார்கள். மோடி தரும் தெம்பில்தான் எடப்பாடி பழனிசாமி அணியினர் சசிகலாவையும் தினகரனையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த துடிக்கின்றனர்” என்கிறார் தினகரனின் முக்கிய ஆதரவாளர்.

அதிருப்தி அடைந்த மேலூர்

அதிமுக அணிகள் இணைப்பு விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் கடந்த 14-ம் தேதி மேலூர் பொதுக்கூட்டத்தில் அதிக கூட்டத்தை திரட்டி, முதல்முறையாக பொதுக்கூட்டத்தில் தினகரன் பங்கேற்றார். அப்போது அவர், அதிமுகவையும் சசிகலா குடும்பத்தையும் அழிக்க முயற்சிக்கும் பாஜகவை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மோடியை பற்றியும், அமித் ஷாவை பற்றியும் அரசியல் விமர்சகர் விமர்சிக்கும் அளவுக்குகூட தினகரன் பேசவில்லை.

அரசியலை தாண்டி, மக்கள் நலப்பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறையைக்கூட அவர் கண்டிக்கவில்லை. மாறாக மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என யோசனை சொல்கிறார். தினகரனின் இந்த அணுகுமுறையால் தொடக்கத்தில் ஆர்ப்பரித்த கூட்டம், பாதியில் அதிருப்தி அடைந்தது. எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறார்கள் என பேசிக்கொண்டே கலைந்து சென்றது.

இதேபோல தன்னை ‘420’ என அழைத்த எடப்பாடி பழனிசாமியையும், மதிக்காமல் பேசிவரும் அமைச்சர்களையும் தினகரன் கண்டிக்காமல் இருந்தார். திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டதை கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய கர்நாடக மாநில செயலாளர் புகழேந்திக்கும், கொள்கைப் பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கும் பெயருக்கு கூட நன்றி சொல்லவில்லை.

மேலூரில் தொண்டர்களை திரட்டிய நிர்வாகி களுக்கு நன்றி சொல்லவில்லை. முதல்வரை பகைத்துக் கொண்டு, மேடைக்கே வந்த எம்எல்ஏக்களுக்கு பாராட்டு சொல்லவில்லை. இதனால் மேடையிலே தினகரனின் ஆதரவாளர்கள் பலரின் முகம் இருண்டு போனதை பார்க்க முடிந்தது.

வருத்தமே இல்லை

இது தொடர்பாக தினகரனின் ஆதரவாளரான புகழேந்தியிடம் கேட்டபோது, “ சசிகலா, தினகரனால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என நம்புகிறேன். தினகரனின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றி சொல்லவில்லை என்பதை பெரிதாக நினைக்கவில்லை. தமிழகத்தில் பாஜக பெரிய கட்சியாக இல்லாததால், அதனை விமர்சிக்க தேவையில்லை” என்றார்.

நாஞ்சில் சம்பத் கூறுகையில், “மேடையில் அமர்ந்திருக்கும் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு பேசுவது பழைய திமுக நடைமுறை. அந்த தேவையற்ற கலாச்சாரத்தை தினகரன் பின்பற்றாததை வரவேற்கிறேன். அதற்காக வருத்தப்படவில்லை. இதன் மூலம் தமிழக அரசியலுக்கு தினகரன் புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். சொந்தக் கட்சியில் நிறைய பிரச்சினைகள் இருப்பதால் பாஜகவையோ, மத்திய அரசையோ விமர்சிக்க தேவையில்லை” என்றார்

இறுதியாக தினகரனின் முக்கிய ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் நிலவும் குழப்பத்தால் உண்மையான அதிமுக தொண்டர்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். மத்தியில் ஆளும் பாஜக, அதிமுக-வுக்குள் செய்துவரும் உள்ளடி வேலைகளால் கொதித்து போயுள்ளனர். எத்தகைய சூழ்ச்சியையும் கடுமையான எதிர்ப்பின் மூலமாகவே ஜெயலலிதா தடுத்து வந்தார். அவரது வழியில் தினகரனும், சசிகலாவும் எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டும். அப்போதுதான் அதிமுகவையும், ஆட்சியையும் காப்பாற்ற முடியும். ‘நமது எம்ஜிஆர்’ ஆசிரியர் அழகு மருது ராஜை கறுப்பு ஆடு என குறிப்பிட்டதை புரிந்துகொள்ள முடியவில்லை. தொண்டர்களின் எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் சசிகலாவும், தினகரனும் பயந்து பூனையாக இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இதே நிலை நீடித்தால் கட்சி என்னாகுமோ என கவலையாக இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

35 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்