வரலாறு காணாத மழை வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By இரா.வினோத்

பெங்களூருவில் பெய்த வரலாறு காணாத மழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் ஏற்பட்ட கடும் மின்வெட்டு, போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக பெங்களூருவில் லேசாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மீண்டும் மழை பெய்தது. இரவு விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது.

மீண்டும் காலை முதல் மழை கொட்டியதால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. சாந்திநகரில் சாலையோரத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த 5 தகர ஷெட் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் 20-க்கும் மேற்பட்டோர் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் தளத்தில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின. மல்லேஸ்வரம், ஓக்லிபுரம் உள்ளிட்ட இடங்களில் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் 2 பேருந்துகள் சிக்கிக்கொண்டன. இதேபோல சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் மழை நீர் சூழ்ந்ததால் தமிழகம், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க முடியாமல் ஊழியர்கள் தவித்தனர்.கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் 200-க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள், 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. சாய்ந்த மின் கம்பங்கள், மரங்களை அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூருவில் தொடரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடுகிறது. நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுதந்திர தினமான நேற்று மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதேபோல சாலைகளில் மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மீட்பு பணிகள் தீவிரம்

இந்நிலையில் மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் படகுகளில் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்த மழை நீரை இன்ஜின் மூலமாக வெளியேற்றி வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் குடிசைகளில் தங்கியுள்ள மக்களை மீட்டு, பத்திரமான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூருவில் கடந்த 1890-ல் அதிகபட்சமாக 16.6 செ.மீ. மழை பெய்தது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில்18.4 செ.மீ. பெய்துள்ளது. பெங்களூரு வரலாற்றில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும். அடுத்த 2 நாட்களுக்கும் கனமழை நீடிக்கும்'' என எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

இந்தியா

38 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்