ஜே.என்.யூ விவகாரம்: மத்திய அரசு, டெல்லி காவல்துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களையும், மாணவர்களையும் பாரதிய ஜனதாவின் எம்.எல்.ஏ மற்றும் ஆதரவாளர்கள் நேற்று முன் தினம் தாக்கினர். இது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை செயலாளர், டெல்லி காவல்துறை ஆணையர், டெல்லி அரசின் தலைமை செயலாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை சமர்ப்பிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலைகழக(ஜே.என்.யூ) மாணவர் கன்னைய்யா குமார் கடந்த 9-ஆம் தேதி அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட போது தேசவிரோத கோஷங்கள் எழுப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து 7 மாணவர்கள் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னைய்யா, நேற்று முன் தினம் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நடந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு ஏற்ற ஆணையம், இன்று அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜவகர்லால நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மீதான ’தேசதுரோக’ வழக்கை விசாரிக்கவிருந்த டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் உள்ளேயும் வெளியிலும் பத்திரிகையாளர்களையும், மாணவர்களையும் டெல்லியின் பாஜக எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சி ஆதரவாளர்கள் வழக்கறிஞர்கள் போல் வேடமிட்டு தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதை அங்கிருந்த ஏராளமான போலீஸார் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சுதந்திரமான விசாரணை நடத்தி தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

நீதி மன்றத்தில் இருக்க ஜவர்கர்லால நேரு பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு உரிமை உள்ளது, பாஜக எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சி ஆதரவாளர்கள் வழக்கறிஞர்கள் போல் வேடமிட்டு தாக்கியதன் மூலம் இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மனித உரிமை மீறல் ஏராளமான போலீஸார் முன்னிலையில் அரங்கேறியுள்ளது. இதைத் தடுக்கும் கடமையுள்ள போலீஸார் வேடிக்கை பார்த்து மனித உரிமை மீறலுக்கு வகை செய்துள்ளனர். இது அவர்கள் கடமை தவறிய செயலும் ஆகும். குற்றம் செய்தவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதா என்று தெரியவில்லை.

இந்த சம்பவம் மோசமான மனித உரிமை மீறலாகும். எனவே மத்திய அரசின் உள்துறை செயலாளர், டெல்லி காவல்துறை ஆணையர், டெல்லி அரசின் தலைமை செயலாளர் அகியோர் ஒரு வாரத்திற்குள் அவசர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

பல்கலையில் போலீஸ் அனுமதி மீது மற்றொரு நோட்டீஸ்

மாணவர் சங்க தலைவர் கன்னய்யாவை கைது செய்ய ஜே.என்.யூ வளாகத்தில் போலீஸ் நுழைந்ததன் மீது அறிக்கை கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர், டெல்லி அரசின் தலைமை செயலாளர், டெல்லி மாநிலக் காவல்துறை ஆணையர் மற்றும் ஜே.என்.யூவின் பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில், கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ’தி இந்து’ ஆங்கிலம் நாளிதழில் வெளியானது உட்பட பல்வேறு இந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி சேனல்களின் செய்திகள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டாவது நோட்டீஸிற்கு இருவார காலத்திற்குள் அறிக்கை அனுப்பக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

11 mins ago

உலகம்

32 mins ago

வாழ்வியல்

51 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்