பெங்களூரு சிறைக்கு தினகரன் வரவில்லை: பண்ணை வீட்டில் தங்கலா?

By இரா.வினோத்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவை பார்க்க புறப்பட்டுச் சென்ற டிடிவி.தினகரன் திட்டமிட்டபடி சிறைக்கு வரவில்லை. இதனால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தினகரன் பெங்களூரு வந்துவிட்டார் ஆனால் சிறைக்கு வராமல் நட்சத்திர விடுதியிலோ அல்லது அவரது நண்பரின் பண்ணை வீட்டிலோ தங்கியிருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்து கிடக்கிறது. கட்சி சின்னமும் முடக்கப்பட்டுள்ளது. சின்னத்தை மீட்க இருதரப்பும் முயன்றுவந்த நிலையில்தான் இன்று (திங்கள்கிழமை) காலை டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் (24) என்பவர் கைது செய்யப்பட்டார். அதிமுக சின்னத்தை மீட்டுத்தந்தால் ரூ.60 கோடி அளவு பணம் தருவதாக தினகரன் கூறியதாகவும் முன்பணமாக ரூ.1.3 கோடி பணம் தந்ததாகவும் போலீஸில் வாக்குமூலம் அளித்தார்.

இதனடிப்படையில் டெல்லி கிரைம் பிரிவு போலீஸார் தினகரன் மீது சட்டப்பிரிவுகள் 170, 120-பி, 7 ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கெனவே, சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்கிவைத்துவிட்டு பிளவுபட்டவர்கள் ஒன்றுசேர மூத்த அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்பட்ட நிலையில் டெல்லி கைது சம்பவமும் சேர்ந்து கொள்ள, பரபரப்பான சூழலில் இன்று காலை 10.30 மணிக்கு காரில் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார் தினகரன்.

4 மணி நேரம் காத்திருப்பு

தினகரன் பிற்பகல் 2.30 மணியளவில் பெங்களூரு சிறைக்கு சசிகலாவை சந்திக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 6.30 மணிவரை தினகரன் வரவில்லை. அவர் நாளை சசிகலாவைப் பார்க்க வருவார் எனக் கூறப்படுகிறது. பெங்களூரு சிறை போலீஸாரும் தினகரன் தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டுவருவதால் அவர்களும் தினகரன் இன்று வருவாரா என பத்திரிகையாளர்கள் பலமுறை கேட்டும் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும், சசிகலாவை நாளை சந்திப்பதற்கான அனுமதியைக்கூட தினகரன் தரப்பு ஏற்கெனவே பெற்றிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. கொட்டும் மழையிலும் பத்திரகையாளர்கள் 4 மணி நேரத்துக்கு மேலாக சிறை வாசலிலேயே காத்திருந்தனர்.

பண்ணை வீட்டில் தங்கல்?

இதற்கிடையில் 'தி இந்து'-வுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின்படி தினகரன் பெங்களூரு வந்துவிட்டார். அவர் நட்சத்திர விடுதியிலோ அல்லது அவரது நண்பரின் பண்ணை வீட்டிலோதான் தங்கியிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. டெல்லி போலீஸார் சம்மனை எடுத்துக்கொண்டு சென்னை புறப்பட்டுள்ளனர். நாளை அவர்கள் சென்னையில் தினகரனை நேரில் சந்தித்து சம்மனை வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் இல்லாமல் சசிகலாவை பார்க்க வந்தேன் என்று காரணம் கூறி பெங்களூருவில் இருந்துவிட்டால் சம்மனை பெற முடியாது. சம்மனை நேரில் பெறுவதை தாமதித்து அதற்குள் டெல்லியில் முன்ஜாமீன் பெறுவதே தினகரன் திட்டம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஒற்றுமையாக இருக்க ஓபிஎஸ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என அதிமுக எம்.பி.யும் மூத்த தலைவருமான தம்பிதுரை கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

19 mins ago

க்ரைம்

25 mins ago

க்ரைம்

34 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்