எனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தராவும் உதவினர்- லலித் மோடி பேட்டி

By செய்திப்பிரிவு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சதிவேலை காரணமாகவே தனக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைக்கவில்லை என்கிறார் லலித் மோடி.

விசா பிரச்சினையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும்தான் தனக்கு உதவியதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ஒப்புக்கொண்டுள்ளார்.

விசா பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு பாஜகவுக்கு சவால் விடுத்துவரும் நிலையில், பிரச்சினை பெரிதான பிறகு முதன்முறையாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், லலித் மோடி இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இது தொடர்பாக, இந்தியா டுடே சேனலுக்கு அளித்த பேட்டியில் லலித் மோடி கூறியது:

"விசா பிரச்சினையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவிடமும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராவிடமும் நான் உதவி கோரியது உண்மையே. சுஷ்மா ஸ்வராஜ் எனது குடும்ப நண்பர். மேலும், சட்ட ரீதியாகவும் எங்கள் குடும்பங்களுக்கு இடையே தொடர்பு இருக்கிறது.

சுஷ்மாவின் மகள் பன்சூரி கடந்த 4 ஆண்டுகளாக எனது வழக்கறிஞராக இருக்கிறார். விசா விவகாரம் தொடர்பாக சுஷ்மாவுடன் பேசினேன். அதேபோல் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தாராவுடன் எனக்கு 30 ஆண்டு கால நட்பு இருக்கிறது. இவர்களைத் தவிர எனக்கு நிறைய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் என் மனைவியை பார்க்கச் செல்வதற்காகவே இந்த உதவியைப் பெற்றேன்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்னை அளவுக்கு அதிகமாகவே விமர்சித்துவிட்டது. என் பாஸ்போர்ட்டை தவறாக முடக்கியுள்ளனர். நான் நினைத்திருந்தால் இந்தியக் குடியுரிமையை உதறிவிட்டு வேறு நாட்டுக் குடியுரிமையுடன் பாஸ்போர்ட் பெற்றிருக்கலாம். நான் அதைச் செய்யவில்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். குறிப்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சதி வேலையின் காரணமாகவே எனக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைக்கவில்லை. ஐ.பி.எல். சர்ச்சையில் சசி தரூர் பதவி விலகியதால் எனக்கு மேலும் நெருக்கடி அளிக்கப்பட்டது. இந்தியாவில் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, நான் வெளிநாட்டில் இருக்கிறேன்" என்றார்.

சுஷ்மா பதவி இழக்கக் கூடாது:

தனக்கு உதவியதால் சுஷ்மா வெளியுறவு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த லலித் மோடி, "ஒரு நேர்மையான விவகாரத்துக்கு உதவியதற்காக சுஷ்மா பதவி இழக்கக் கூடாது" என்றார்.

சிதம்பரம் விளக்கம்:

லலித் மோடி விவகாரத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கு இந்திய தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் வெளியானால், அவர் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைக்கும் என ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

லலித் மோடி குற்றச்சாட்டு குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், "லலித் மோடி விவகாரத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளுக்கு இந்திய தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் வெளியானால் அவர் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு விடை கிடைக்கும். உடனடியாக அந்தக் கடிதங்களை வெளியிடுக" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சை பின்னணி:

ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது கடந்த 2010-ல் ஊழல் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். அவரை தேடப்படும் குற்றவாளியாக அமலாக்கத் துறை அறிவித்தது. அவரது பாஸ்போர்ட் 2011 மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் மனைவியை பார்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசிடம் கடந்த ஆண்டு விசா கோரி லலித் மோடி விண்ணப்பித்தார். இந்தியாவில் வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறி விசா வழங்க அந்நாட்டு அரசு மறுத்தது. இதில் லலித் மோடிக்கு விசா கிடைக்க மத்திய அமைச்சர் சுஷ்மா உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தவறுக்குப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. எனினும் மத்திய அரசுடன் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சுஷ்மாவுக்கு பக்கபலமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்