தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அரசின் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை பெங்களூரு சிறை தொலைக்காட்சியில் பார்த்த சசிகலா

By இரா.வினோத்

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வருமான வரி செலுத்துவதால் தங்களுக்கு சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என்று கோரி உள்ள போதிலும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. இதனால் மகளிர் பிளாக்கில் உள்ள 2-வது அறையில் கடந்த 4 நாட்களாக‌ இளவரசியுடன் ச‌சிகலா தங்கியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சசிகலா சிறையில் எப்படி இருந்தார் என சிறை கண்காணிப்பாளர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது கூறியதாவது:

சிறைக்குள்ளேயே இருந் தாலும் தமிழக அரசியல் வட்டாரத்தில் அரங்கேறும் அத்தனை காட்சிகளையும் சசிகலா உன்னிப்பாக கவனித்து வருகிறார். தினமும் காலையில் நூலகத்துக்கு சென்று சுமார் 2 மணி நேரம் தமிழ், ஆங்கிலம் ஆகிய செய்தித்தாள்களை தீவிரமாக படிக்கிறார்.

இதேபோல மகளிர் சிறை பிளாக்கில் உள்ள தொலைக்காட்சி அறைக்கு சென்று செய்தி சேனல்களை பார்க்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அரசின் மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதால், காலை 10.30 மணிக்கே சசிகலா இளவரசியுடன் தொலைக்காட்சி அறைக்கு வந்துவிட்டார்.

சபை கூடியதும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட போது, ‘‘எனக்கு அப்போதே தெரியும். திமுக ஏதாவது சதித் திட்டம் போடுவார்கள்'' என சொல்லி, கையை பிசைந்து கொண்டிருந்தார். அவையில் நடந்த கூச்சல் குழப்பம், தர்ணா, அமளி எல்லாவற்றையும் சசிகலா பொறுமையாக கவனித்தார். திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் நடந்துக்கொண்ட விதத்தை கண்டு கொதித்து, தரையை ஓங்கி தட்டினார்.

சிறையில் பறந்த உத்தரவு

அவை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதும் மகளிர் சிறை கண்காணிப்பாளர் ஆர். அனிதாவிடம், தொலைபேசியில் பேச அனுமதி என கேட்டார். அதற்கான மனுவை நிரப்பிக் கொடுத்ததும் அனிதா, “அவசரத் தேவைக்கு மட்டுமே தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படும்” என்று கூறி அனுமதி வழங்கினார்.

இதையடுத்து, சசிகலா சிறையில் இருக்கும் எஸ்டிடி பூத் மூலமாக சென்னையில் உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகியை தொலைபேசியில் தொடர்புகொண்டு 10 நிமிடங்கள் பேசினார்.

சசிகலா தொலைக்காட்சியில் மூழ்கி இருந்ததால் மதிய உணவு சாப்பிடவில்லை. ஒரு வழியாக திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக வெற்றிபெற்றதை பார்த்து உற்சாகமாக கைகளை தட்டி சத்தமாக சிரித்தார்.

சிறைக்கு வந்த நாளில் இருந்து நேற்றுதான் சசிகலா கொஞ்சம் சந்தோஷமாக காணப்பட்டார். இவ்வாறு சிறை கண்காணிப்பாளர்கள் வட்டாரம் தெரிவித்தது.

இளவரசியுடன் மகள்கள் சந்திப்பு

கர்நாடக சிறைத்துறை விதிமுறையின்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வை யாளர்கள் கைதிகளை சந்திப்பதற்கு அனுமதிக் கப்படுவதில்லை. 50-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குவிந்திருந்ததால் போலீஸார் சசிகலாவின் வழக்கறிஞர்களை கூட சிறைக்குள் அனுமதிக்கவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பத்திரிகையாளர்கள் அங்கிருந்து கிளம்பியதும், இளவரசியின் மருமகன் ராஜராஜன், மகள்கள், வழக்கறிஞர் மூர்த்தி ராவுடன் சிறைக்கு வந்தனர். சிறை கண்காணிப்பாளர் ஹரி கிருஷ்ணாவிடம் அனுமதி பெற்ற இளவரசியின் ம‌கள்கள், உள்ளே சென்று இளவரசியை சந்தித்து பேசினர். ஆனால் சசிகலாவை சந்திக்க அனுமதி மறுத்ததாக தெரிகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

விளையாட்டு

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்