ஆந்திரா - ஒடிஸா இடையே இன்று கரையை கடக்கிறது ஹுத்ஹுத் புயல்

By செய்திப்பிரிவு

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘ஹுத்ஹுத்’ புயல் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், ஒடிஸா மாநிலம் கோபால்பூர் இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடலோர ஆந்திராவில் 5.14 லட்சம் பேர் வெறியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக 68 ரயில்களின் போக்குவரத்தை தென்மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி ஹுத்ஹுத் புயல் விசாகப்பட்டினத்திலிருந்து 200 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இது இன்று மதியம் கரையைக் கடக்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.

புயல் கரையை நோக்கி நெருங்கி வரும் நிலையில் கடலோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் நேற்று மதியம் முதல் மழை பெய்ய தொடங்கியது. புயல் காரணமாக மணிக்கு 50-70 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடல் அலைகள் மிகவும் சீற்றத்துடன் காணப்படுவதுடன், ஸ்ரீகாகுளம், காக்கிநாடா பகுதிகளில்,கடல் நீர் 30-40 மீட்டர் வரை முன்னோக்கி வந்துள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர். விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு, மேற்கு கோதாவரி ஆகிய 7 மாவட்டங்களில் ‘ஹுத்ஹுத்’ புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் இம்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 5.14 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகளையும் ஆந்திர அரசு செய்துள்ளது. இதற்காக 370 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 170 முதல் 180 கி.மீ வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் உடைவதுடன் மின் கம்பிகளும் அறுந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் மின்வாரிய துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சாலைகள், தண்டவாளங்கள் பழுதாகும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இச்சாபுரம்-காக்கிநாடா இடையே நேற்று இரவு 7 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும். கடலோர ஆந்திராவில் புயல் காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தென்மத்திய ரயில்வே துறை 68 ரயில்களை ரத்து செய்துள்ளது. மேலும் 31 ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இதன் பொது மேலாளர் ஸ்ரீவாத்ஸவா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கன்னவரம், கலிங்கப்பட்டினம், விசாகப்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகளில் நேற்று 10-ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டது. காக்கிநாடா, மசூலிப்பட்டினம் துறைமுகங்களில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமாக இருக்கும் என கருதப்படும் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜய நகரம், கிழக்கு கோதாவரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளை கவனிப்பதற்காக, கடற்படை சார்பில் 8 ஹெலிகாப்டர்கள், 60 ஆழ்கடல் நீச்சல் வீரர்களைக் கொண்ட 15 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். ராணுவம், பேரிடர் மீட்பு படை, கடற்படை என பல்வேறு குழுக்கள் பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 விமானங்கள், 162 படகுகள், ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, புயல் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேபோன்று ஒடிஸாவில் உள்ள கோராபுட், ராயகடா, மல்காசாகிரி, நவரங்பூர், கந்தமால், கஜுபதி கலஹந்தி, கன்ஜாம் ஆகிய மாவட்டங்களிலும் அதிக பாதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் இப்பகுதிகளில் முகாமிட்டு புயல் தாக்குதலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்