தேவயானி கைது விவகாரத்தில் இந்தியா பதிலடி: அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகள் ரத்து

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.

பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு திரும்பியபோது பொது இடத்தில் போலீஸார் அவரைக் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக தரவேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான நிலையத்துக்கான ‘பாஸ்’ அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா விவரங்கள், அந்த பள்ளிகளில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதியம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்கள் குறித்த விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் ஆகியவை குறித்தும் தகவலைத் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் சார்பில் இறக்குமதி செய்யப்படும் மது உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இனி விமான நிலையத்தில் சோதனையிட்டு சரிபார்த்தபிறகே அனுமதிக்கப்படும்.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாலையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போது எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த தடுப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. அந்த தூதரகம் அமைந்துள்ள பாதையை பொது போக்குவரத்துக்கு போலீஸார் திறந்துவிட்டனர்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது:

“இந்த விவகாரத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக எங்களின் வேதனையை அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளோம். எங்களின் எதிர்ப்பை வலுவாக தெரிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அமெரிக்காவின் இந்த கைது நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளவே முடியாது. பெண் துணைத் தூதரின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.

இதுபோன்று அதிகாரிகளை கண்ணியக் குறைவாக நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதைத் தவிர மேலும் சில பெரிய பிரச்சினைகளும் உள்ளன. அவை தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

ஷிண்டேவுடன் தேவயானியின் தந்தை சந்திப்பு

அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவுக்கு இந்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று அவரின் தந்தையிடம் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே உறுதியளித்தார்.

தேவயானி கோப்ரகடேவின் தந்தை உத்தம், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் உத்தம் கோப்ரகடே கூறியதாவது: "இதுபோன்ற துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வகையில் பெரிய தவறு ஒன்றையும் தேவயானி செய்துவிடவில்லை. இந்த விவகாரத்தில் தேவயானிக்கு இந்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். தேவயானிக்கு தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பு உள்ளது என்று ஷிண்டே என்னிடம் கூறினார்" என்றார்.

சுஷீல் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியுள்ளேன். தேவயானிக்கு விரைவில் நீதி கிடைக்கும்" என்றார்.

முன்னதாக அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் அழைத்துப் பேசிய மத்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், அரசு ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், "அமெரிக்க தூதரக ஊழியர்கள் சிலருக்கு ‘கூட்டாளி’ என்ற பெயரில் விசா வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றச் செயல் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் அமெரிக்க தூதரக பணியாளர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

7 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

கார்ட்டூன்

2 hours ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்