நீர்வளத்துறை அமைச்சருடன் சித்தராமையா சந்திப்பு: காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு

By இரா.வினோத்

காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதியை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று சந்தித்தார். அப்போது, காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக் கூடாது என வலியுறுத்தினார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான மனுவை விசாரித்த‌ உச்ச நீதிமன்றம், ‘த‌மிழகத்துக்கு செப்டம்பர் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தினமும் நொடிக்கு 6 ஆயிரம் கனஅடி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். 4 வாரத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்’ என‌ கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து கர்நாடகாவில் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் தொடர்கிறது.

ஆட்சி பறிபோனாலும் தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறக்கக் கூடாது. சிறைக்குச் சென்றாலும் எக்காரணம் கொண்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க விடக்கூடாது என கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளிலிருந்து தமிழகத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டுக்குச் சென்ற சித்தராமையா அவருடன் ஆலோசனை நடத்தினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்த சித்தராமையாவின் துணிச்சலான முயற்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார்.

உமா பாரதியுடன் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் டெல்லி சென்ற சித்தராமையா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திக்விஜய்சிங் மற்றும் மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது காவிரி விவகாரத்தில் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல், சட்டப்போரட்டம் நடத்துமாறு காங்கிரஸ் தலைவர்கள் அறிவுரை வழங்கியதாகத் தெரிகிறது.

பின்னர் நேற்று மாலை ம‌த்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியைச் சந்தித்தார். அப்போது, ‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பதால் அதனை அனுமதிக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் நிராகரிக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்